* அதிமுகவுடன் கூட்டணியை தொடராவிட்டால் பாஜவுக்குதான் இழப்பு ஏற்படும். அது பாஜவின் எதிர்காலத்துக்கு நல்லது அல்ல. அண்ணாமலையை அழைத்து எச்சரிக்க வேண்டும்.
* டெல்லி மேலிடம் எடுக்கும் முடிவின் அடிப்படையில் தமிழக பாஜவின் நிலைப்பாடு குறித்து சென்னையில் நாளை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
சென்னை: அதிமுகவுடனான கூட்டணி முறிந்த பிறகு முதல் முறையாக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லி விரைந்தார். அவர் அமித்ஷாவை சந்தித்து பேச முடிவு எடுத்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்து பாஜ தலைமையிலான கூட்டணியில் அதிமுக இடம் பெற்றது. இதில் அதிமுக தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற இடங்களில் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக தலைமையிலான அணியில் பாஜ இடம் பெற்றது. இதில் பாஜ 4 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுக, பாஜ இடையே மோதல் போக்கு உருவானது. தொடர்ந்து பாஜ தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.
அதன் பிறகு அண்ணாமலை, எடப்பாடியுடனான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலையை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் அண்ணா குறித்து அண்ணாமலை விமர்சித்தார். இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் விபரீதமான விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று அதிமுக தலைவர்கள் எச்சரித்தனர். ஆனால் அண்ணாமலை அதிமுகவினரின் எச்சரிக்கையை கண்டுகொள்ளவே இல்லை.
தனது கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று அறிவித்தார். இதனால், அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், பாஜ மேலிடம் அண்ணாமலையை மாற்ற முடியாது என கறாராக கூறி விட்டது. அதிமுகவையும், எடப்பாடியையும் கடுமையாக விமர்சித்து வரும் பாஜவுடன் கூட்டணி அமைக்க கூடாது என்று அதிமுக தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர். பாஜவை கூட்டணியில் சேர்த்தால் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் அதிமுகவுக்கு கிடைக்காது என்றும் வலியுறுத்தி வந்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் கடந்த 25ம் தேதி நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் பாஜவுடன் அதிமுக கூட்டணி கிடையாது.
பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் அதிமுக விலகுவதாக அதிரடியாக அறிவித்தது. இது பாஜவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதிமுக கூட்டணி முறிவு குறித்து டெல்லி மேலிடம் தான் பதில் சொல்லும் என்று பாஜ தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். ஆனால், இதுவரை அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தொடர்பாக அண்ணாமலை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. டெல்லி மேலிடமும் இதுவரை எந்த பதிலும் சொல்லாததால் தமிழக பாஜவினர் கடும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
அதிமுக கூட்டணி முறிவு தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கட்சி மேலிடம் கூறியது. அவரும் அறிக்கை தயாரித்து டெல்லி மேலிடத்துக்கு அனுப்பியுள்ளார். அதில் அதிமுகவுடன் கூட்டணியை தொடராவிட்டால் பாஜவுக்கு தான் இழப்பு ஏற்படும். அது பாஜகவின் எதிர்காலத்திற்கு நல்லது அல்ல. எனவே, அதிமுக வைத்துள்ள, அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் இனிமேல் அண்ணாமலை அதிமுகவை விமர்சிக்க கூடாது. இது தொடர்பாக அண்ணாமலையை அழைத்து எச்சரிக்க வேண்டும் தேர்தல் நேரத்தில் அதிமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசி கொள்ளலாம் என்று அறிக்கையை சமர்பித்தார்.
இச் சூழலில், அதிமுகவுடன் கூட்டணி முறிந்து முதல் முறையாக தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று பிற்பகல் 3.20 மணியளவில் கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். நேற்றிரவு 7.20 மணிக்கு டெல்லி வந்தடைந்தார். அதன் பின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச முடிவு எடுத்துள்ளார். அதிமுக கூட்டணி விவகாரத்தில் டெல்லி மேலிடம் என்ன முடிவு எடுக்க போகிறது என்ற பரபரப்பு பாஜவினரிடையே ஏற்பட்டுள்ளது. டெல்லி மேலிடம் எடுக்கும் முடிவின் அடிப்படையில் தமிழக பாஜவின் நிலைப்பாடு குறித்து சென்னையில் நாளை நடக்கும் பாஜ மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
The post அதிமுகவுடனான கூட்டணி முறிந்த பிறகு முதல் முறையாக அண்ணாமலை டெல்லி விரைந்தார் appeared first on Dinakaran.
