சென்னை: தமிழ்நாட்டில் வரும் தொடர் விடுமுறையையொட்டி வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பால், சென்னை விமான நிலையத்தில் டிக்கெட் கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளன. தமிழ்நாட்டில் மிலாடி நபி, சனி, ஞாயிறு, காந்தி ஜெயந்தி என்று நாளை முதல் (வெள்ளி தவிர) அக். 2ம் தேதி வரை தொடர்ச்சியாக விடுமுறைகள் வருகின்றன. இவ்வாறு 4 நாட்கள் தொடர் விடுமுறையோடு, 29ம் தேதி வெள்ளி மற்றும் வேலை நாளாக இருப்பதால், பலர் அன்றும் விடுப்பு எடுத்து விட்டு தங்களுடைய பிள்ளைகளுக்கும் காலாண்டு விடுமுறை தொடங்கி விட்டதால் ஜாலியாக 5 நாள் சுற்றுலா பயணத்தை திட்டமிட்டு, அதிலும் விமான பயணங்களாக ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகை காலங்களில், தமிழ்நாட்டிற்குள் செல்லும் விமானங்களில் தான் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால், தற்போது இந்த ஐந்து நாள் தொடர் விடுமுறையால், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளால் விமானங்களில் கூட்டம் நிறைந்து வழிகிறது. இதனால் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணங்களும் பல மடங்கு அதிகரித்துள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டின் பாங்காக் செல்ல, வழக்கமான விமான கட்டணம் ரூ.9,720. இன்று ரூ.32,581, நாளை ரூ.28,816. துபாய் செல்ல வழக்கமான கட்டணம் ரூ.10,558. இன்று ரூ.21,509, நாளை ரூ.20,808. சிங்கப்பூர் செல்ல வழக்கமான கட்டணம் ரூ.9,371. இன்று ரூ.20,103, நாளை ரூ.18,404. மலேசியா கோலாலம்பூர் செல்ல வழக்கமான கட்டணம் ரூ.7,620. இன்று ரூ.15,676, நாளை ரூ.14,230. கொழும்பு செல்ல வழக்கமான கட்டணம் ரூ.6,698. இன்று ரூ.11,234, நாளை ரூ.10,630.
இதேப்போல் உள்நாட்டு விமான கட்டணமான சென்னை- மைசூர் இடையே வழக்கமான விமான கட்டணம் ரூ.2,558. இன்று ரூ.7,437, நாளை ரூ.5,442. சென்னை-கோவா வழக்கமான கட்டணம் ரூ.4,049. இன்று ரூ.8,148, நாளை ரூ.9,771. இவ்வாறு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் சொல்லும் விமான கட்டணங்கள் தொடர் விடுமுறையயையொட்டி பல மடங்கு அதிகரித்துள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, கோவை போன்ற இடங்களுக்கு செல்லும் விமானங்களில், கட்டணங்கள் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. அதே நேரத்தில், சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமான கட்டணம் மட்டும் அதிகரித்துள்ளது. சென்னை தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.3,853. இன்று ரூ.11,173, நாளை ரூ.9,975. இந்த கட்டண உயர்வு பயணிகளிடையை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் வேறு வழியில்லாமல் பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
The post தமிழ்நாட்டில் தொடர் விடுமுறையையொட்டி விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு: பாங்காங் கட்டணம் ரூ.9,720ல் இருந்து ரூ.32,581 ஆக உயர்வு; பயணிகள் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.
