சென்னை: வெளிநாடுகளில் போலி கணக்குகள் மூலம் பல கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் பாஜ ெசன்னை மாவட்ட தலைவர் காளிதாஸ் மற்றும் பாஜ மாநில தலைமை அலுவலக அதிகாரி ஜோதிகுமார் ஆகியோருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் என தமிழகம் முழுவதும் 40 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெளிநாட்டு முதலீடு ஆவணங்கள், பினாமி பெயரில் உள்ள சொத்துக்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. தஞ்சாவூரை சேர்ந்தவர் சண்முகம். தொழிலதிபரான இவர், ரியல் எஸ்டேட், மணல் குவாரி உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார். இவர் நடத்தும் மணல் குவாரிகள் மூலம் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக ரியல் எஸ்டேட் தொழிலில் கணக்கு காட்டியதாக கூறப்படுகிறது. மேலும், வெளிநாடுகளிலும், தனது பினாமி நிறுவனங்கள் மூலம் பண பரிவர்த்தனை நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோதனை நடத்தினர். அப்போது சட்ட விரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களும் சிக்கியது. இதையடுத்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த வருமான வரித்துறை அமலாக்கத்துறை ஆவணங்கள் அளித்தனர். அதைதொடர்ந்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை அதிகாரிகள் தொழிலதிபர் சண்முகம் நடத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனம், மணல் குவாரிகள் மற்றும் அவரின் துணை நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வழக்கு தொடர்பாக பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதன்படி சென்னை தி.நகரை சேர்ந்த காளிதாஸ். இவர் டிஜிட்டல் பேனர்கள், போஸ்டர்கள் பிரிண்டிங் அடிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். காளிதாஸ் தற்ேபாது பாஜ தென் சென்னை மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் பெண் ஆளுநர் ஒருவரின் வலது கரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் பாஜ மாநில தலைமை அலுவலகத்தில் ஜோதிகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இருவரும் வசித்து வரும் சென்னை தி.நகர் சரவணா தெரு மற்றும் திலக் தெருவில் உள்ள விஜய் என்ற அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் 5 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தொழிலதிபர் வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் படி விசாரணை நடத்தினர். அப்போது, தொழிலதிபருக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 3 மணி நேரம் விசாரணைக்கு பிறகு 2 பாஜ பிரமுர்களிடம் இருந்து சில ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், அதே அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டில் தொழிலதிபர் சண்முகத்திற்கு வீடு உள்ளது. சோதனையின் போது தொழிலதிபர் வீடு பூட்டப்ட்டிருந்தது. சண்முகம் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டும் தான் இந்த வீட்டில் தங்குவது வழக்கம். மற்ற நாட்களில் தனது மனைவி மற்றும் 3 மகன்களுடன் தஞ்சாவூரில் உள்ள வீட்டில் தான் அவர்கள் நிரந்தரமாக வசித்து வருகின்றனர். இதனால் வீட்டை திறந்து சோதனை நடத்துவதற்காக காலை 11 மணி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சண்முகம் வீட்டின் முன்பு காத்திருந்தனர். அதன் பிறகு அவரது வீட்டில் சோதனை நடத்தி சில ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதேபோல்,சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள சண்முகத்திற்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மற்றும் துணை நிறுவனங்கள், மணல் குவாரிகள் என சென்னை, தஞ்சை, செங்கல்பட்டு என தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், மணல் குவாரிகள் மூலம் கிடைத்த வருமானத்தை சட்ட விரோதமாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்து, அதன் மூலம் பல நூறு கோடி பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்து இருப்பதற்கான ஆவணங்கள், பாஜ பிரமுகர்கள் பினாமிகள் போல் செயல்பட்டு வந்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜ பிரமுகர்களின் தொடர்புகள் குறித்து முழுமையாக தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் மற்றும் மணல் குவாரி தொழிலதிபர்களுக்கு சொந்தமான 40 இடங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினாலும், பாஜ பிரமுகர்கள் 2 பேரிடம் விசாரணை நடத்தி முக்கிய ஆவணங்கள் கைப்பற்றினர்.
பாஜ தலைமை அலுவலகத்துக்கு மாதம் ரூ.50 லட்சம்
மணல் குவாரி அதிபர்களிடம் இருந்து மாதம் ரூ.50 லட்சம் வீதம், பாஜ தலைமை அலுவலகத்தில் உள்ள ஒரு அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை சில நாட்களுக்கு முன்னர் மணல் குவாரி அதிபர்களின் வீடுகளில் நடந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சோதனை பாஜ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post பல நூறு கோடி சட்டவிரோத பண பரிவர்த்தனை தமிழகத்தில் 40 இடங்களில் ரெய்டு: பாஜ மாவட்ட தலைவர், தலைமை அலுவலக அதிகாரி வீடுகளில் அமலாக்கத் துறை அதிரடி appeared first on Dinakaran.
