சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்த வழக்கில் புகார் அளித்திருந்த நடிகை விஜயலட்சுமி வரும் வெள்ளிக்கிழமை ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும் போலீசார் வழக்கை முடித்து வைத்தனர். ஆனால், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு தனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. இதையடுத்து, சீமான் மீதான வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக நடிகை விஜயலட்சுமி வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
The post திருமண மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் மனு நடிகை விஜயலட்சுமி செப்.29ல் ஆஜராக வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
