*வலங்கைமான் தாலுகாவில் 10 ஆயிரம் ஹெக்டேர் இலக்கு
வலங்கைமான் : வலங்கைமான் தாலுகாவில் சம்பா சாகுபடியாக 10 ஆயிரம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்ட சூழலில் வடகிழக்கு பருவ மழையை விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை குறைந்த அளவே பெய்வதாலும், மேட்டூர் அணையிலிருந்து போதிய தண்ணீர் கிடைக்காததாலும், வடகிழக்கு பருவமழையை நம்பியே சம்பா சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக உரிய நேரத்தில் சம்பா சாகுபடி பணிகளை துவங்க இயலாமல், வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின்னரே சாகுபடி பணிகள் துவங்கியது.
மேலும் அப்போது மூன்று போக சாகுபடி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஒரு போக சம்பா சாகுபடியை மிகுந்த போராட்டத்துக்கு இடையே விவசாயிகள் மேற்கொண்டனர்.
கடந்தஆண்டு காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்கு பருவ மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
அதனை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளும் வகையில் முன்கூட்டியே மேட்டூர் அணை பாசனத்துக்காக திறக்கப்பட்டது. அப்போது குறுவை சாகுபடி உரிய இலக்கை அடைந்த நிலையில் அதனை தொடர்ந்து சம்பா சாகுபடி பணிகள் உரிய நேரத்தில் துவங்கப்பட்டது. கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 333 நாட்களாக 100 அடிக்கு குறையாமல் நீடித்தது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே தண்ணீர் திறந்து வைத்தார். இருப்பினும் தென்மேற்கு பருவமழை குறைவின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வெகுவாக குறைந்தது.
நாள்தோறும் பாசனத்துக்காக வெளியேற்றப்படும் நீரின் அளவை விட மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருந்ததால் நீர்மட்டம் மளமளவென சரிந்தது.
இந்நிலையில் மேட்டூர் அணை நீரை நம்பி குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். வலங்கைமான் தாலுகாவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளன் ஆறு மூலம் பாசன வசதி பெறுகின்றன.நடப்பு ஆண்டு பத்தாயிரம் ஹெக்டேர் சம்பா சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியால் சாகுபடி பரப்பு அதிகரிப்பு
வலங்கைமான் தாலுகாவில் நடப்பாண்டு சம்பா சாகுபடிக்கு விதைவிடும் பணிகள் சுமார் 60 சதவீதம் அளவுக்கு நடைபெற்றுள்ளது. முன் பட்ட சம்பா சாகுபடியாக சுமார் 10 சதவீதம் அளவுக்கு பணிகள் நடைபெற்றுள்ளது. பருவ மழைகள் பொய்க்கும் காலங்களில் விவசாயிகள் தடையின்றி சாகுபடி பணிகள் மேற்கொள்ளும் வகையில் தற்போது திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று சுமார் 1.50 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கியுள்ளது. இதன் காரணமாக சுமார் 20 சதவீதம் அளவுக்கு கூடுதலாக சம்பா சாகுபடி பணிகள் மின் மோட்டார் மூலம் செய்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பாவை காப்பாற்றுவாரா வருண பகவான்?
தற்போது உள்ள சூழ்நிலையில் சம்பா சாகுபடி பணிகள் பெரிய அளவில் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை உரிய நேரத்தில் துவங்கி குறைந்த நாட்களில் அதிக அளவு மழை பெய்யாமல் நீண்ட நாட்கள் குறைந்த அளவில் மழை பெய்தால் சம்பா பயிர்களை விவசாயிகள் பாதுகாக்கலாம். டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி பணிகள் நடைபெறுவதற்கு தென்மேற்கு பருவமழை கைவிட்ட நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
The post சம்பா சாகுபடி பணிகளுக்கு வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கும் விவசாயிகள் appeared first on Dinakaran.
