×

அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து நலத்திட்டங்கள் மக்களை சென்றடைய அலுவலர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

கிருஷ்ணகிரி: அரசு அலுவலர்கள் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து, திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைய ஒத்துழைப்பு தர வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், அனைத்து துறை சார்பில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘தமிழக அரசு அறிவித்த முத்திரை பதித்த திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்த, அரசு அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அரசுத்துறை அலுவலர்கள் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து அனைத்து நலத்திட்டங்களும் அனைத்து மக்களையும் சென்றடைய ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். தொடர்ந்து 3,293 பயனாளிகளுக்கு ரூ.41 கோடியே 54 லட்சத்து 41 ஆயிரத்து 516 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் பொருட்டு, பொதுமக்கள் மற்றும் அரசு துறை அலுவலர்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார். பின்னர், கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 20 அரசு பள்ளிகளில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 20 கழிப்பறைகள் கட்டுவதற்கு ரூ.40லட்சத்திற்கான காசோலையை பர்கூர் எம்எல்ஏ மதியழகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூலம் கலெக்டரிடம் வழங்கினார்.

முன்னதாக, சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சென்னப்பள்ளி ஊராட்சியில், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பாக 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.26 கோடியே 81 லட்சம் மதிப்பில் 5 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட காய்கறி முதன்மை பதப்படுத்தும் கிடங்கு மற்றும் குளிர்பதன கிடங்கு கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்டுமான பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

* மாணவர் விடுதி வார்டன் சஸ்பெண்ட்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு வந்தார். உடனடியாக, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியை, திடீர் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களின் வருகை பதிவேடு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் மற்றும் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் கோப்புகளை ஆய்வு செய்தார். இதில், பொருட்களின் இருப்பில் குளறுபடி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, விடுதியின் வார்டனான முருகன்(54) என்பவரை, உடனடியாக சஸ்பெண்ட் செய்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார்.

*கூட்டணி வைத்தாலும், முறித்தாலும் திமுகவுக்குதான் வெற்றி
கிருஷ்ணகிரி தேவராஜ் மகால் வளாகத்தில், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, தற்போது ஒரு தகவலை நான் கேள்விபட்டேன். அதிமுக, பாஜ., கூட்டணி முறிந்து விட்டதாக கே.பி.முனுசாமி கூறி இருக்கிறார். 2021 தேர்தலில் நாம் அதிமுக.வை விரட்டினோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜ வை வீட்டிற்கு விரட்ட வேண்டும். அதிமுக, பாஜவுடன் கூட்டணி வைத்தாலும் சரி, கூட்டணியை முறித்துக் கொண்டாலும் சரி எப்படியும் திமுக தான் ஜெயிக்கப் போகிறது. அதற்கு அச்சாரமாக சேலம் இளைஞர் அணி மாநில மாநாடு அமைய வேண்டும் என்றார்.

The post அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து நலத்திட்டங்கள் மக்களை சென்றடைய அலுவலர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Krishnagiri ,
× RELATED பாசிச கூட்டத்தின் கூடாரத்தை இழுத்து...