சாத்தூர்: குழந்தைகளுடன் பெண் போலீஸ் தற்கொலை செய்ததால் விரக்தியடைந்த ரயில்வே ஏட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மதுரை அய்யர்பங்களா பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ் மனைவி ஜெயலட்சுமி(37). மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது மகன் ராஜா (11) மகள் பவித்ரா (9) ஆகியோருடன் சமயநல்லூர் பகுதிக்கு சென்றார். சமயநல்லூர் – தேனூர் இடையே உள்ள தண்டவாளத்தில் திருவனந்தபுரத்திலிருந்து மதுரை வழியாக திருச்சி நோக்கி சென்ற ரயில் முன் குழந்தைகளுடன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வந்தனர். முதலில் பணியிட மாற்றத்தால் ஏற்பட்ட மன உளைச்சலால் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்டது. இந்த வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இந்திராநகரை சேர்ந்தவர் சொக்கலிங்கப்பாண்டியன்(49). இவர் தென்காசி மாவட்டம், செங்கோட்டை ரயில் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். சொக்கலிங்கப்பாண்டியன் மதுரை ரயில்நிலைய காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது உடன் பணியாற்றிய மதுரை திருப்பாலையை சேர்ந்த பெண் காவலர் ஜெயலட்சுமியுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில் சொக்கலிங்கப்பாண்டியன் செங்கோட்டைக்கு பணி மாறுதலாகி சென்றபோது, அங்கு பணிபுரியும் மற்றொரு பெண் காவலருடன் தொடர்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக ஜெயலட்சுமிக்கும், சொக்கலிங்கப்பாண்டியனுக்கும் கடந்த 20ம் தேதி தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஜெயலட்சுமி மதுரை அருகே சோழவந்தானில் தனது இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த சொக்கலிங்கப்பாண்டியன் மனவேதனையில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டியில் உள்ள சகோதரர் வீட்டுக்கு வந்தார். அதன்பிறகு விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அமீர்பாளையம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் திருச்செந்தூரில் இருந்து சென்னை சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரை உடலை கைப்பற்றிய தூத்துக்குடி ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
The post 2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் தற்கொலை விவகாரம் ரயில் முன் பாய்ந்து ஏட்டும் தற்கொலை: தகாத உறவால் விபரீத முடிவு appeared first on Dinakaran.
