×

இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது: பூ, பழம், வாழை இலை விலை கடும் அதிகரிப்பு

* கோயில்களில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு

சென்னை: விநாயகர் சதுர்த்தி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பூஜை மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை நேற்று களை கட்டியது. அதேநேரத்தில் பூ, பழம், வாழை இலை விலையும் கடுமையாக அதிகரித்து காணப்பட்டது. விநாயகர் அவதார திருநாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை பயன்படுத்தி மக்கள் தமிழகம் முழுவதும் பூஜை பொருட்கள் வாங்க கடை வீதிகளில் திரண்டனர். இதனால், வழக்கத்தை விட பஜார் வீதிகளில் கூட்டம் நேற்று நிரம்பி வழிந்தது. சென்னையை பொறுத்தவரை பூஜை பொருட்கள் வாங்க கோயம்பேடு, மயிலாப்பூர், புரசைவாக்கம், தி.நகர், திருவான்மியூர், பிராட்வே, ராயபுரம், தாம்பரம், வடபழனி, ஜாம்பஜார், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் நேற்று காலை முதல் அதிகமாக காணப்பட்டது. மாலை நேரத்தில் கூட்டம் மேலும் இரட்டிப்பாக காணப்பட்டது. சாலைகளிலேயே பொரி, ஆப்பிள், ஆரஞ், சாத்துக்குடி, மக்காச்சோளம், கொய்யா பழங்கள், கரும்பு, தென்னங்கீற்று ஆகியவை விற்பனை செய்யப்பட்டன. விலை அதிகமாக இருந்த போதிலும் அதை பற்றி பொருட்படுத்தாமல் பொருட்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர். மேலும் பூ, பழம் விற்பனையும் படுஜோராக நடைபெற்றது.

விநாயாகர் சதுர்த்தி என்பதால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்கள் மற்றும் வாழை இலையின் விலையும் நேற்று உயர்ந்திருந்தது. நேற்று முன்தினம் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.1,000க்கு விற்பனை செய்யப்பட்டது. இது நேற்று காலையில் ரூ.1,500க்கு விற்பனை செய்யப்பட்டது. ஐஸ் மல்லி ரூ.700 லிருந்து ரூ.1,200, கனகாம்பரம் ரூ.600லிருந்து ரூ.800, ஜாதிமல்லி ரூ.600லிருந்து ரூ.1,000, சம்பங்கி ரூ.300லிருந்து ரூ.400, சாமந்தி ரூ.60லிருந்து ரூ.100 பன்னீர் ரோஸ் ரூ.100 லிருந்து ரூ.130, சாக்லேட்ரோஸ் ரூ.160லிருந்து ரூ.210, அரளி பூ ரூ.150லிருந்து ரூ.200 ஆகவும் விலை அதிகரித்து காணப்பட்டது. ஒரு கட்டு பெரிய வாழை இலை ரூ.1,600க்கும், சிறிய கட்டு வாழை இலை ரூ.800க்கும், ஒரு தலைவாழை இலை ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகரித்து இருந்த போதிலும் மக்கள் விலையை பொருட்படுத்தாமல் பொருட்களை வாங்கி சென்ற காட்சியை காண முடிந்தது. அது மட்டுமல்லாமல் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் பல வண்ணங்களில் விற்பனை நடைபெற்றது. பொதுமக்கள் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றப்படி விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். சிறிய சிலைகள் ரூ.60 முதல் ரூ.400 வரையில் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் விநாயகர் சிலைக்கு வைக்கும் பல வண்ணங்களான குடைகள், எருக்கம்பூ விற்பனையும் களை கட்டியிருந்தது. இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதால் பூ, பழங்கள் விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

The post இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது: பூ, பழம், வாழை இலை விலை கடும் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Vinayagar Chaturthi ,Chennai ,Tamil Nadu ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...