×

கொடநாடு வழக்கில் சிபிசிஐடியிடம் வாக்குமூலம் கொடுத்த ஜெ. கார் டிரைவர் அண்ணனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

சேலம்: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடியில் பரபரப்பு வாக்குமூலம் அளித்த ஜெயலலிதா கார் டிரைவரின் அண்ணன் திடீரென மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் பலியானார். இந்த வழக்கில் தடயங்களை அழித்ததாக அவரது அண்ணன் தனபால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார். இவர் கடந்த 14ம் தேதி கோவையில் சிபிசிஐடி முன்பு ஆஜராகி 8 மணி நேரம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அவரை மீண்டும் விசாரணைக்கு 26ம் தேதி சிபிசிஐடி போலீசார் அழைத்துள்ளனர். அவர் கொடுத்துள்ள பட்டியலில் உள்ளவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் சிபிசிஐடி போலீசார் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே சமுத்திரத்தில் உள்ள வீட்டில் இருந்தபோது நேற்று அதிகாலை 5 மணிக்கு தனபாலுக்கு திடீரென நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டது. ஏற்கனவே அவர் ஆஞ்சியோ சிகிச்சை செய்துள்ளார். மேலும் இதயத்தில் இரண்டு அடைப்புகள் இருப்பதாகவும் இதுபோன்று நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு வரும்படியும் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். இதனால், நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டவுடன் இடைப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று காலை 10 மணியளவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். உறவினர்கள் அருகில் இருக்கும்படி கூறப்பட்டது. அவருடன் யாரும் இல்லை என்பதால் தன்னை டிஸ்சார்ஜ் செய்யுமாறு கூறி அவர் வீட்டிற்கு திரும்பி சென்றார்.

The post கொடநாடு வழக்கில் சிபிசிஐடியிடம் வாக்குமூலம் கொடுத்த ஜெ. கார் டிரைவர் அண்ணனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : J. ,CBCID ,Koda Nadu ,Salem ,Jayalalithaa ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...