சென்னை: கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு மதுரை, வேலூர், ஓசூர், சேலம், திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து பூக்கள் லாரிகளில் வருகின்றன. கடந்த 14 நாட்களாக பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கடும் சரிவில் இருந்தது. இந்நிலையில், இன்னும் 2 நாட்களில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால், கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று காலை பூக்களின் விலை சற்று உயர்ந்தது. ஒரு கிலோ மல்லி மற்றும் கனகாம்பரம் ரூ.600, ஐஸ் மல்லி, முல்லை, ஜாதிமல்லி ரூ.500, சாமந்தி ரூ.50, சமங்கி ரூ.100, பன்னீர் ரோஸ் ரூ.60, சாக்லேட் ரோஸ் ரூ.100, அரளி பூ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, “இன்னும் 2 நாட்களில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட இருப்பதால் அனைத்து பூக்களின் விலையும் தற்போது உயர்ந்துள்ளது. பூக்களின் விலை இன்னும் 2 அல்லது 3 மடங்கு விலை உயரவும் வாய்ப்பி ருக்கிறது” என்றார்.
The post கோயம்பேட்டில் பூக்கள் விலை உயர்வு appeared first on Dinakaran.
