×

குழந்தை திருமணத்தை தவிர்க்க வேண்டும் பெண்கள் படிப்பதால் குடும்பம், சமுதாயம், நாடு வளம்பெறும்

*கலெக்டர் பேச்சு

திருப்பத்தூர் : பெண்கள் படிப்பதால் அவர்களது குடும்பம், சமுதாயம் மற்றும் நாடு வளம் பெறும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.திருப்பத்தூர் அடுத்த பசலிக்குட்டை கிராமத்தில் பகுதிநேர நியாய விலை கடை திறப்பு விழா நேற்று நடந்தது. திம்மணாமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம்மாள் சந்திரன் மற்றும் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வழங்கல் அலுவலர் முருகேசன் வரவேற்றார்.

தொடர்ந்து, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எம்எல்ஏ நல்லதம்பி ஆகியோர் பகுதிநேர நியாய விலை கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். சி2539 பொம்மிகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் ஒருபகுதியாக இந்த பகுதிநேர நியாய விலை கடை செயல்படும். விழாவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது: நீண்ட கால பிரச்னை உள்ள பகுதியில் புதிய நியாயவிலை கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்களை வாங்க 5 கிலோ மீட்டர் தொலைவு சென்று வந்தீர்கள். தற்போது எம்எல்ஏ முயற்சியால் உங்கள் பகுதியின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, இங்கு பகுதிநேர நியாய விலை கடை திறக்கப்பட்டுள்ளது. திம்மணாமுத்தூர் கடையில் உள்ள 830 கார்டுகளிலிருந்து 151 குடும்பங்கள் பிரித்து இந்த பகுதிநேர கடை திறக்கப்பட்டுள்ளது.

பல்வேறு அரசு நலத்திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் செயல்படுத்தி வருகிறார். பசியோட வரும் குழந்தைகள் நலன் கருதியே காலை உணவு திட்டம். பெண் கல்வி ஏன் முக்கியம் என்றால் பெண்கள் திருமணம் முடிக்கிறபோது அந்த குடும்பம் மட்டுமல்ல, அந்த சமுதாயமும், நாடும் வளம்பெறும்.பெண்களை படிக்க வையுங்கள். எந்த பிரச்னை என்றாலும் சமாளிப்பார்கள்.

ஆனால் 18 வயதுக்கு குறைவாக இருக்கிற பெண்ணுக்கு திருமணம் செய்தால் அந்த பெண் வந்து கருவுற்று பிற்காலத்தில் இறப்பதற்கான சாத்திய கூறுகள் 5 மடங்கு அதிகம். குழந்தை பிறக்கின்றபோது அந்த குழந்தை மாற்றத்திறனாளியாக பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம். எனவே, குழந்தைகள் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் பி.ஜி.அருணாச்சலம் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post குழந்தை திருமணத்தை தவிர்க்க வேண்டும் பெண்கள் படிப்பதால் குடும்பம், சமுதாயம், நாடு வளம்பெறும் appeared first on Dinakaran.

Tags : Tirupattur ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...