*விழுப்புரத்தில் எழுத்துத்தேர்வு நடந்தது
விழுப்புரம் : நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் குடிமைப்பணிக்கு தமிழக அரசின் நிதியுதவி திட்டத்துக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது.நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித்தேர்வு பிரிவு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.
போட்டித்தேர்வு பிரிவு தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித்தேர்வுகளை எளிதாக அணுகும் வகையில் பல பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதையடுத்து 2023-24 ஆண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குடிமை பணிகள் தேர்வுகளுக்காக படித்து வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளை செய்து உதவும் வகையில் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் மத்திய குடிமை பணி தேர்வுக்கு படித்து வரும் 1,000 மாணவர்கள் மதிப்பீட்டு தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலை தேர்வுக்கு தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும். இது சமீப காலமாக மத்திய குடிமைப்பணிகள் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் விகிதத்தை மாற்றியமைக்க தமிழக அரசால் எடுக்கப்பட்டிருக்கும் மாபெரும் முயற்சியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க கடந்த ஆகஸ்ட் 2 முதல் 17ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான எழுத்துத்தேர்வு நேற்று மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்றது. அதன்படி விழுப்புரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் தேர்வு நடைபெற்றது. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மாவட்ட கல்வித்துறை மூலம் தேர்வுகள் கண்காணிக்கப்பட்டு, ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
The post நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் குடிமை பணிக்கு தமிழக அரசின் நிதியுதவி திட்டம் appeared first on Dinakaran.
