×

கும்பாபிஷேகம் பார்க்க வந்த இடத்தில் கான்கிரீட் சிலாப் விழுந்து சிறுமி பலி

 

திட்டக்குடி, செப். 11: கும்பாபிஷேகம் பார்க்க வந்த இடத்தில் கான்கிரீட் சிலாப் விழுந்து சிறுமி பலியானார். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள மருதாத்தூர் கிராமத்தில் நேற்று முத்துமாரியம்மன், செல்லியம்மன், அய்யனார் மற்றும் விநாயகர் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்தை பார்ப்பதற்காக, கோயிலுக்கு அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 20 ஆண்டு பழமைவாய்ந்த அரசு கட்டிடத்தின் மீது பக்தர்கள் ஏறி நின்று கும்பாபிஷேகம் பார்த்துவிட்டு, பள்ளி கட்டிடத்தின் அருகில் இருந்த மகளிர் சுய உதவி குழு கட்டிடத்தின் வழியாக இறங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது பாரம் தாங்காமல் முன்பக்க கான்கிரீட் சிலாப் உடைந்து அந்த வழியாக வந்த ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்துள்ள காவனூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் மகள் சுதந்திராதேவி (15) என்ற சிறுமியின் தலை மீது விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த பொதுமக்கள் சிறுமியை மீட்டு அருகில் உள்ள வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கும்பாபிஷேகம் பார்ப்பதற்காக வெளியூரில் இருந்து பாட்டி வீட்டிற்கு வந்த சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கும்பாபிஷேகம் பார்க்க வந்த இடத்தில் கான்கிரீட் சிலாப் விழுந்து சிறுமி பலி appeared first on Dinakaran.

Tags : Kumbabhishekam ,Phetakkudi ,Cuddalore district ,Dinakaran ,
× RELATED பொதுமக்கள் சாலை மறியல்