×

ரூ.10 ஆயிரம் கோடிக்கு போலி மருந்தில் இமாலய ஊழல் முதல்வர், சபாநாயகர், அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி, டிச. 24: போலி மருந்து வழக்கில் ரூ. 10 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாகவும் முதல்வர், சபாநாயகர், அமைச்சர் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டுமென முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: போலி மருந்து விநியோகம் மக்களின் உயிர் சம்மந்தப்பட்ட பிரச்னை. இந்த வழக்கில் ஆட்சியில் இருக்கும் முக்கிய புள்ளிகள் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். சபாநாயகர் செல்வம் இதில், நேரடியாக தலையிட்டிருக்கிறார். அரியாங்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சிபிசிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

ரூ.10 ஆயிரம் கோடிக்கு போலி மருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய இமாலய ஊழலாகும். சபாநாயகருக்கு நீலநிற சொகுசு காரை ராஜா வாங்கி கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ரூ.42 லட்சத்துக்கு தீபாவளிக்கு அவருடைய தொகுதியில் பரிசு பொருட்கள் கொடுக்க ராஜா பணம் கொடுத்திருக்கிறார். எனவே அவர் பதவி விலக வேண்டும். முதல்வர் ரங்கசாமி தான் சுகாதாரத்துறையின் அமைச்சர், அவரது துறையில் இது நடந்துள்ள காரணத்தால் அவரும் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ராஜாவிடம் அக்கா அடைமொழியை கொண்டவர், சமீபத்தில் ராஜினாமா செய்த சத்தியவேந்தன் ஆகியோரும் கையூட்டு பெற்றுள்ளனர். இதுபோன்ற பல அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் இதில் ஈடுபட்டுள்ளனர்.

தொழில் துறையை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம். அவரது துறையின் அனுமதியின்றி இந்த போலி மருந்து தொழிற்சாலைகள் நடந்தன. இதனால் அமைச்சர் நமச்சிவாயமும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆகவே சிபிஐ, என்ஐஏ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை விசாரணை நடத்தும் போது அதிகாரத்தில் இருப்பவர்கள் அழுத்தம் கொடுக்க கூடாது. ஆகவே தான் முதல்வர், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டும். சிபிஐ விசாரணை அழுத்தமின்றி சுதந்திரமாக நடக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். இது புதுச்சேரி மாநிலமே கண்டிராத மிகப்பெரிய ஊழல். இதில் முறையாகவும், முழுமையாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும். தேவையான ஆதாரங்களை கொடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Former chief ,Narayanasamy ,minister ,Puducherry ,Chief Minister ,Speaker ,
× RELATED பெண்ணாடம் அருகே சோகம் பள்ளி வேன் மோதி பைக்கில் சென்ற தந்தை, மகன் பலி