×

மொபட் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பலி-6 பேர் படுகாயம்

மயிலம், டிச. 23: மயிலம் அடுத்துள்ள செண்டூர் மின் நிலையம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மொபட் மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். 6 பேர் படுகாயம் அடைந்தனர். கடலூர் மாவட்டம் ஓ.டி. பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் மகன் நவீன் (21). இவரது பெண் நண்பர் அதே பகுதி வசந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் தீபிகா (19). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர்கள் இருவரும் நேற்று மொபட்டில் கடலூரில் இருந்து மயிலம் கோயிலுக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மயிலம் அடுத்துள்ள செண்டூர் மின் நிலையம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்தபோது, சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த கார் திடீரென இவர்களது மொபட் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இதில் மொபட்டின் பின்னால் உட்கார்ந்து சென்ற கல்லூரி மாணவி தீபிகா சாலையின் நடுவில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் மொபட்டை ஓட்டிச் சென்ற நவீன், காரில் பயணம் செய்த 5 பேர் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மயிலம் போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியான தீபிகாவின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Mayilam ,Chennai-Trichy National Highway ,Centurion Power Station ,Cuddalore district O.D. ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே டயர் வெடித்த...