ராமநாதபுரம், செப். 5: பொட்டகவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை திறக்கக் கோரி விவசாயிகள் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு அளித்தனர். ராமநாதபுரம் அருகே உள்ள பொட்டகவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் தங்க நகைகளை வைத்து விவசாயக்கடன், நகைக்கடன் பெற்றுள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த கூட்டுறவு கடன் சங்கம் பூட்டிக் கிடப்பதாக கூறப்படுகிறது. அதனை மீண்டும் திறக்க வலியுறுத்தி கிராம விவசாயிகள் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு அளித்தனர்.
இது குறித்து விவசாய சங்கத் தலைவர் அப்துல் ஹமீது கூறுகையில், பொட்டகவயல் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள், கிராம மக்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து விவசாயக் கடன், ஆடு வளர்ப்பு கடன், தங்கநகை கடன் பெற்றிருந்தோம். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் வங்கி பூட்டாமல் திறந்து கிடந்த சம்பவம், அதனை தொடர்ந்து இந்த வங்கியின் செயலர் கையாடல் செய்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களை தொடர்ந்து இந்த கூட்டுறவு கடன் சங்கம் கடந்த சில வாரங்களாக பூட்டிக்கிடக்கிறது. சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டும் திறக்கப்படவில்லை. எனவே நாங்கள் வைத்த தங்க நகைகளின் தன்மை குறித்து அறிந்து கொள்ள கூட்டுறவு சங்கத்தை மீண்டும் திறக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
The post கூட்டுறவு வங்கியை திறக்க கோரிக்கை appeared first on Dinakaran.
