உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே, தொல்லியல் சுற்றுலா சென்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் 1000 ஆண்டு பழமையான கல்வெட்டுகளை பார்வையிட்டனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, உத்தப்புரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்குள்ள மாணவ, மாணவியருக்கு தொல்லியல் சின்னங்கள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும், தொல்லியல் சின்னங்களை நேரில் பார்த்தால் மட்டுமே, முழுமையான புரிதல் ஏற்படும் என களஆய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொல்லியல் சான்றுகளை காண்பதற்கு, ஆசிரியை தனபாக்கியம் மாணவ, மாணவிகளை அழைத்துச் சென்று வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, உசிலம்பட்டி அருகே திருமாணிக்கம் கிராமத்தில் உள்ள 1000 ஆண்டுகள் பழமையான மீனாட்சியம்மன்-சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு மாணவ, மாணவிகள் தொல்லியல் சுற்றுலா சென்றனர். இங்கு 40க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் உள்ள தமிழி, வட்டெழுத்துகள் குறித்தும், அதில் எழுதப்பட்டுள்ள தகவல்கள் குறித்தும் ஆசிரியர் விளக்கமளித்தார். தொடர்ந்து நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட சுப்பிரமணிய சுவாமி சன்னதி மண்டபத்தில் இருந்த 200 ஆண்டு பழமையான கல்வெட்டுகளையும் மாணவர்கள் பார்வையிட்டனர். இந்த பயணம் தமிழர்களின் பழமை குறித்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள உதவியதாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.
The post உசிலம்பட்டி அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் தொல்லியல் சுற்றுலா: பழமையான கல்வெட்டுகளை பார்வையிட்டனர் appeared first on Dinakaran.
