×

அரசின் அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடத்துக்கு ‘சீல்’: அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை

சென்னை: ‘‘தமிழக அரசிடம் கண்டிப்பாக அனுமதி பெற்று தான் கட்டிடம் கட்ட வேண்டும். முன் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டினால், அந்த கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும்’’ என்று அமைச்சர் முத்துசாமி கூறினார். இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கட்டுமான பொறியாளர்கள், நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஆலோசனை கூட்டத்தில் 44 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. அதில் 18 கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டது. கட்டிடங்களுக்கு 12 மீட்டர் உயரம் வரை இப்போது அனுமதியுள்ளது.

அதை 13, 14 மீட்டராக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் தொடர் கட்டுமானம் தொடர்பான இடங்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளன.
நாகர்கோவிலில் தொடர் கட்டிட அனுமதி தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். நாகர்கோவில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பல நகரங்களில் 2019 முதல் பிரச்னை உள்ளது. அந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண திமுக அரசு முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக, எந்தந்தெந்த இடத்தில் தொடர் கட்டுமானங்கள் தேவை என்பது குறித்த ஆய்வை உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செய்து வருகிறது.

விரைவில் இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும். தமிழகத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 7 சதவீத அளவிலான நிலத்துக்கு மட்டுமே மாஸ்டர் பிளான்கள் உள்ளன. இப்போது இதை 19 சதவீதமாக உயர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 22 சதவீதமாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 135 மாஸ்டர் பிளான்கள் கொண்டு வர இருக்கிறோம். இப்போது 23 மாஸ்டர் பிளான்கள் முடியும் நிலையில் உள்ளன. கட்டிடம் கட்டும்போது அரசிடம் கண்டிப்பாக அனுமதி பெற்று கட்ட வேண்டும்.

முன் அனுமதி பெறாமல் யாரும் கட்டிடம் கட்ட வேண்டாம். முன் அனுமதி பெறாமல் நிறைவு சான்றிதழ் பெறமுடியாது. மேலும் அந்த கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும். தமிழகத்தில் 2016ம் ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட மனை பிரிவுகள் அங்கீகாரம் பெறாமல் இருந்தால் அங்கீகாரம் பெற வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதற்கான காலஅவகாசம் முடிந்துவிட்டது. எனவே 2016க்கு முன் அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகள் மற்றும் தனி மனைகளை வரைமுறைப்படுத்துவதற்கு 6 மாத கால அவகாசம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

The post அரசின் அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடத்துக்கு ‘சீல்’: அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Minister ,Muthuswamy ,CHENNAI ,Tamil Nadu government ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...