திருச்சி: படித்து முடித்து 2 ஆண்டுகளாகியும் பட்டம் வழங்கப்படாத தால் ஆளுநர், துணைவேந்தரை கண்டித்து திருச்சி பாரதிதாசன் பல்கலை., மாணவர்கள் பட்டம் விடும் போராட்டம் நடத்தினர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தில் பயின்ற 1.5 லட்சம் மாணவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் படித்ததற்கான பட்டம் வழங்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து பல கட்ட போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் இதுவரை பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகம் பட்டம் வழங்குவதற்கான எந்தவித முயற்சியும் எடுக்காத ஆளுநர், துணைவேந்தரை கண்டித்து நேற்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் முன்பு பட்டம் விடும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் பட்டம் பெறும்போது, மாணவர்கள் அணிந்திருக்கும அங்கியை அணிந்து கொண்டு பல்கலைகழக வாசலில் பட்டம் விட்டனர்.
* கொடைக்கானலுக்கு ஆளுநர் வருகை 2 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என்.ரவி கலந்து கொண்டு 785 மாணவிகளுக்கு நேரடியாக பட்டங்களை வழங்குகிறார். இவ்விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ஆளுநர், பின்னர் சாலை மார்க்கமாக கொடைக்கானலுக்கு நேற்று மாலை வந்தார். ஆளுநர் வருகைக்காக, வத்தலக்குண்டு முதல் கொடைக்கானல் மலைச்சாலை முழுவதிலும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை என 2 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது.
இதனால் சுற்றுலாப்பயணிகள், உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். குறிப்பாக ஓணம் விடுமுறைக்கு கொடைக்கானலுக்கு வந்திருந்த கேரள சுற்றுலாப்பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இந்நிலையில், ஆளுநர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிட விடுதலைக் கழகத்தை சேர்ந்தவர்கள் கொடைக்கானல் உகார்தே நகர் பகுதி சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. கொடைக்கானல் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
The post படித்து முடித்து 2 ஆண்டாகியும் பட்டம் வழங்காத ஆளுநர் ஆர்.என்.ரவி, துணைவேந்தரை கண்டித்து பட்டம் விடும் போராட்டம்: திருச்சியில் மாணவர்கள் அதிரடி appeared first on Dinakaran.
