×

ராணிப்பேட்டையில் குறைதீர்வு கூட்டம் பணம் பெற்று வீட்டுமனை பதிவு செய்து தராமல் அலைக்கழிப்பு

*கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்

ராணிப்பேட்டை : பணத்தை பெற்றுக்கொண்டு வீட்டுமனையை பதிவு செய்து தராமல் அலைக்கழிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணிப்பேட்டை கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். டிஆர்ஓ சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி (பொறுப்பு), சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் வள்ளி, உதவி ஆணையாளர் கலால் வரதராஜ், தாட்கோ மாவட்ட மேலாளர் அமுதாராஜ் (பொறுப்பு) ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர்.கூட்டத்தில், அரக்கோணம் ஒன்றியம், மூதூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மஞ்சுளா அண்ணாதுரை, இளங்கோ, பரசுராமன், சுதாகர், ஜெகந்நாதன் ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மூதூர் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோர் இணைந்து கடந்த 6 மாதங்களாக நடந்த ஊராட்சி மன்ற கூட்டங்களில் ஒரு தீர்மானம்கூட எழுதாமல் ஊராட்சி மன்றம் அங்கீகாரமே இல்லாமல் அரசு வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுத்து செலவு செய்து வருகிறார்கள்.

எனவே, வங்கிக்கணக்கு வரவு, செலவுகளை அரசு அதிகாரி மூலம் தணிக்கை செய்ய வேண்டும். மேலும், 100 நாள் வேலை திட்டத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 20க்கும் மேற்பட்ட பெண்களின் பெயரில் போலி பணியாட்களை உருவாக்கி பணித்தள பொறுப்பாளர் மூலம் பணம் எடுத்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுந்தரம்மாள் பெருமாள் அளித்த மனுவில், நெமிலி ஒன்றியம், மகேந்திரவாடி ஊராட்சிக்குட்பட்ட காலனி பகுதியில் 230 குடும்ப அட்டைகள் உள்ளன. அனைவரும் சுமார் 1 கிமீ தூரம் கூட்டுறவு கடைக்கு சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர். செல்லும் வழியில் பொதுப்பணித்துறை வாய்க்கால் உள்ளது. சோளிங்கர் மெயின் ரோடு உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அப்பகுதி மக்கள் தினக்கூலி வேலை செய்து வருவதால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியவில்லை. எனவே, மகேந்திரவாடி காலனி பகுதிக்கு தனியாக நகரும் நியாய விலைக்கடை அமைத்து தரவேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மேல்விஷாரம் ஜாயிண்ட் ஆக்சன் கன்சோர்டியம் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வாலாஜா பெரிய சவுராஷ்டிரா தெருவில் வசிப்பவர் ₹1100 தவணை முறையில் சீட்டு கட்டினால் 55 மாதங்களுக்கு பிறகு வீட்டுமனை வழங்கப்படும் என்று விளம்பரம் செய்ததையடுத்து மேல்விஷாரம், ஆற்காடு, ராணிப்பேட்டை, கல்மேல்குப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் அவரிடம் பணம் கட்டியுள்ளனர். இதில், மேல்விஷாரத்தை சேர்ந்தவர்கள் மட்டும் சுமார் 60 பேர் இருப்பார்கள்.

ஆனால், 55 மாதங்களுக்கு பணம் கட்டி முடித்த பிறகும் அந்த மனையை சம்பந்தப்பட்ட நபர் பதிவு செய்து தரவில்லை. இதுசம்பந்தமாக வாலாஜா போலீசாரிடம் மனு அளித்தனர். அதன்பேரில், அப்போதைய இன்ஸ்பெக்டர் அந்த நபரை அழைத்து விசாரித்து, உடனடியாக அவர்களுக்கு மனையை பதிவு செய்து தருமாறு அறிவுரை கூறினார். அப்போது ஒப்புக்கொண்டவர் மீண்டும் பொதுமக்களை அலைக்கழித்ததுடன், என்னால் உங்களுக்கு மனை தர முடியாது உங்களால் முடிந்ததை பாருங்கள் என்று மிரட்டும் தொணியில் கூறியுள்ளார்.

இதனால் பணம் கட்டி ஏமாற்றம் அடைந்த நபர்கள் சி.எம். செல், ஐஜி. அலுவலகம், ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம், வாலாஜா காவல் நிலையம் ஆகிய அலுவலகங்களுக்கு புகார் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட நபரிடம் தக்க முறையில் விசாரித்து எழை, எளிய நடுத்தர மக்களுக்கு சேர வேண்டிய இடங்களை அவர்களது பெயரில் பதிவு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

நெமிலி தாலுகா ஏரி நீர்பாசன சங்க தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் நரசிம்மன் அளித்த மனுவில், சங்கத்தலைவர்கள் பொறுப்பு எங்களுக்கு கிடைத்தும் இதுவரையில் எந்தவித உரிமையோ அல்லது அதிகாரமோ வழங்கப்படவில்லை. இதனால் நீர்பாசன கால்வாய்களில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க முடியவில்லை. கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றவோ அல்லது தூர்வாரும் வேலையோ எங்களுக்கு கொடுப்பதில்லை. மதகு பழுதடைந்துள்ள சில இடங்களை சீரமைக்க முடியவில்லை. தண்ணீர் கால்வாய்களை திறக்க முடியவில்லை. இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

நந்தியாலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அளித்த மனுவில், எங்களது ஊராட்சியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பட்டா இல்லாமல் 25 ஆண்டுகளாக மலையையொட்டி வசித்து வருகின்றனர். அவர்களுக்கு வீட்டுமனை பட்டா இல்லாததால் வங்கியில் கல்விக்கடன், வீட்டுக்கடன், தொழில் கடன் என எதையும் வாங்க முடியவில்லை. எனவே, அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மேலும், நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அரசு வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை தொடர்பான குறைகள், கிராம பொதுப்பிரச்னைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த 221 மனுக்களை கலெக்டர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

பின்னர், அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கிய கலெக்டர், அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து, தாட்கோ மூலம் பயனாளி ஒருவருக்கு ₹1,17,579 மதிப்பில் ஆட்டோ வாங்கியதற்கு மானியத்தொகைக்கான காசோலையை கலெக்டர் வளர்மதி வழங்கினார். இந்த கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செல்போனில் மூழ்கிய அதிகாரிகள்

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில், வருவாய்த்துறை, வேளாண்மை துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை, மின்சாரத்துறை உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில், கலெக்டர், டிஆர்ஓ மற்றும் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்று விசாரிக்
கின்றனர்.

ஆனால், கூட்டத்திற்கு வரும் அலுவலர்கள் சிலர் செல்போனில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஷேர் சாட் போன்றவற்றை பார்ப்பது, வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் செய்வது, செல்போனில் பேசுவது என பொறுப்பற்ற முறையில் இருந்தனர். இதனால் கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.

The post ராணிப்பேட்டையில் குறைதீர்வு கூட்டம் பணம் பெற்று வீட்டுமனை பதிவு செய்து தராமல் அலைக்கழிப்பு appeared first on Dinakaran.

Tags : Ranipet ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...