×

சென்னை-கோலாலம்பூர் இடையே தினசரி, கூடுதல் விமான சேவை துவக்கம்

மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு நேற்று முதல் பாத்திக் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மூலமாக புதிதாக 2 விமான சேவைகள் துவக்கப்பட்டு உள்ளன. இதனால் மலேசியாவுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர். சென்னை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்கு இதுவரை 2 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்கள், 2 ஏர் ஏசியா விமானங்கள் மற்றும் ஒரு இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக நாளொன்றுக்கு 10 விமான சேவைகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் மலேசியா நாட்டுக்கு சுற்றுலாவாகவும், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு இணைப்பு விமான சேவைகள் இருப்பதால், சென்னையில் இருந்து மலேசியா செல்லும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

எனினும், சென்னை-மலேசியாவுக்கு நாள்தோறும் 5 விமானங்கள் மட்டுமே இயங்குவதால், அந்த விமானங்களில் பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முதல் சென்னை விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூருக்கு புதிதாக தினசரி விமான சேவையை பாத்திக் ஏர்லைன்ஸ் நிறுவனம் துவக்கியுள்ளது. இந்த பாத்திக் ஏர்லைன்ஸ் விமானம் ஒவ்வொரு நாளும் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் மாலை புறப்பட்டு, இரவு 10.25 மணியளவில் சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு வந்து சேரும். பின்னர், இங்கிருந்து மீண்டும் இரவு 11.15 மணியளவில் கோலாலம்பூருக்கு புறப்பட்டு செல்கிறது. இது போயிங் ரக விமானம் என்பதால், ஒரே நேரத்தில் 189 பயணிகள்வரை செல்ல முடியும்.இதன்மூலம் சென்னை-கோலாலம்பூர் இடையே கூடுதலாக ஒரு ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் புதிதாக 2 விமான சேவைகளை துவக்கியுள்ளதால் மலேசியாவுக்கு சுற்றுலா மற்றும் இணைப்பு விமானங்களை பிடிக்க செல்லும் பயணிகளுக்கு பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னை-கோலாலம்பூர் இடையே தினசரி, கூடுதல் விமான சேவை துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kuala Lumpur ,Meenambakkam ,Pathik Airlines ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...