×
Saravana Stores

₹98 லட்சத்தில் பால் தரம் பார்க்கும் கருவிகள்

கிருஷ்ணகிரி, ஆக.24: கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு, ₹98 லட்சம் மதிப்பில் 60 பால் தரம் பார்க்கும் கருவிகள் வழங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், தொகுப்பு பால் குளிர்விப்பு மையம், கிருஷ்ணகிரி சமநிலை பால் பண்ணை ஆகியவற்றை, தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் சரயு, எம்எல்ஏக்கள் பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், களர்பதி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் மற்றும் துடுகனஅள்ளி தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் ஆகியவற்றை திறந்து வைத்து, 91 பயனாளிகளுக்கு ₹35 லட்சத்து 57 ஆயிரத்து 864 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் பரிசுகளை வழங்கினார். மேலும், கிருஷ்ணகிரி ஆவின் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

பின்னர், அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு, தலா ₹1.65 லட்சம் மதிப்பில், 60 பாலின் தரம் மற்றும் கலப்படம் அறியும் கருவிகள் என மொத்தம் ₹98 லட்சம் மதிப்பிலான பால் தரத்தை பார்க்கும் கருவிகள் வழங்கப்படவுள்ளது. கிருஷ்ணகிரி ஆவின் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 2.10 லட்சம் லிட்டர் பால் கையாளும் வசதி இருந்தும், கடந்த காலங்களில் பால் கொள்முதல் மிகவும் குறைவாக இருந்தது. கடந்த 3 மாதங்களில் ஆவினில் முற்போக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதால், பால் கொள்முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியை அதிகரிக்க, அனைத்து இடங்களிலும் புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் துவங்கப்படும். ஏற்கனவே இருக்கும் சங்கங்கள் வலுப்படுத்தப்படும். செயல்படாமல் இருக்கும் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள், மறுகட்டமைப்பு செய்யப்படும். விவசாய பெருமக்களிடம் பால் பண்ணை ஏற்படுத்துவதும், பால் மாடுகள் வாங்கவும் தாட்கோ மற்றும் மாவட்ட தொழில் மையம் மூலமாக கடனுதவி வழங்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

பின்னர், பால் உற்பத்தியாளர்களின் குழந்தைகள் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்தவருக்கு ₹10 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்தவருக்கு ₹5 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்தவருக்கு ₹3 ஆயிரத்திற்கான காசோலைகள், அதிகப்படியாக பால் உற்பத்தி செய்த ஊத்தங்கரை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு முதல் பரிசு, கெங்கபிராம்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு 2ம் பரிசு, பூசாரிப்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு 3ம் பரிசு, கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழகளை அமைச்சர் வழங்கினார்.

மேலும், தாதம்பட்டி, தொகரப்பள்ளி, பெல்லாரம்பள்ளி, போத்தாபுரம், ஒட்டப்பட்டி, சிங்காரப்பேட்டை, கௌதாசபுரம், காட்டனூர், கெங்கபிராம்பட்டி, ஊத்தங்கரை ஆகிய 10 தொகுப்ப பால் குளிரூட்டும் மையத்திற்கு மதிப்பூதியமாக ₹10.48 லட்சத்துக்கான காசேலை, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 8 நபர்களுக்கு ₹13.45 லட்சம் மதிப்பில் ஓய்வூதிய பணப்பலனுக்கான காசோலை, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் 30 நபர்களுக்கு கால்நடை பராமரிப்பு கடனுதவியாக ₹11.46 லட்சம் கடனுதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில், ஆவின் பொது மேலாளர் டாக்டர்.சுந்தரவடிவேல், உதவி பொது மேலாளர் டாக்டர் நாகராஜன், துணை பதிவாளர் (பால்வளம்) விஸ்வேஷ்வரன், கூட்டுறவு சங்க பதிவாளர் ஜெரினாபானு, முதுநிலை ஆய்வாளர் இம்ரான், முன்னாள் எம்எல்ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன், கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், ஊத்தங்கரை ஒன்றிய குழு தலைவர் உஷா குமரேசன், பேரூராட்சி தலைவர் அமானுல்லா, மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர் மாலதி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரஜினிசெல்வம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ₹98 லட்சத்தில் பால் தரம் பார்க்கும் கருவிகள் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED ஓசூரில் தனியார் பள்ளி மாணவியை...