×

புகார் அளிக்கும் நபர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் பெண்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் உடனே போலீசாரை அணுகி புகார் தெரிவிக்கலாம்

*விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எஸ்பி பேச்சு

வாணியம்பாடி : வாணியம்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் உடனே போலீசாரை அணுகி புகார் தெரிவிக்கலாம். புகார் அளிக்கும் நபர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று எஸ்பி ஆல்பர்ட்ஜான் பேசினார்.வாணியம்பாடி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளரங்கில் காவல்துறை உட்கோட்டம் சார்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்து சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். நகர காவல் ஆய்வாளர் துரைராஜ், தாலுகா போலீஸ் நிலைய ஆய்வாளர் பழனி, கல்லூரி ஆலோசகர் லியாகத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி முதல்வர் ரேணு வரவேற்றார். மாவட்ட பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஆய்வாளர் லதா, வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய ஆய்வாளர் சாந்தி, ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, கருணை இல்லம் இயக்குனர் டேவிட் சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக எஸ்பி ஆல்பர்ட் ஜான் கலந்து கொண்டு பேசியதாவது:

இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண் கல்வி என்பது மிகவும் அவசியமான ஒன்று. பள்ளி, கல்லூரிகள் இயங்கும் நாட்களில் பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற செயல்கள் தடுக்கும் பொருட்டு போலீசார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகள் இருக்கும் பகுதியில் தொடர் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பெண்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக போலீசாரை அணுகி புகார் தெரிவிக்கலாம்.

இதுபோன்ற புகார் அளிக்கும் நபர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். புகார் அளிக்கும் நபர்கள் தங்களுடைய பெயர் கூட பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆபத்தான நேரத்தில் 100, 1098, 1091 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளவும். எந்த நேரத்திலும் காவல்துறை உங்களை அணுகி நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, மாணவிகளின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு எஸ்பி பதிலளித்தார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில், பேராசிரியை சுதா நன்றி கூறினார்.

The post புகார் அளிக்கும் நபர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் பெண்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் உடனே போலீசாரை அணுகி புகார் தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : SP Speech at Awareness Show ,Vaniyambadi ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...