×

காதலிக்கும்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய காதலன்: போலீசார் விசாரணை

பூந்தமல்லி: காதலிக்கும்போது எடுத்த புகைப்படங்களை, சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என, காதலியை காதலன் மிரட்டியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த 20 வயது பெண் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். தற்போது அவர் மற்றொரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இதற்கிடையே, இவருடன் முன்பு கல்லூரியில் படிக்கும்போது ஜெயகோகுல்ராம்(20), என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.

அவர் அந்த பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது ஜெயகோகுல்ராமுக்கு குடிப்பழக்கம் இருப்பதை அறிந்து கொண்டு, அவரின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் ஒதுங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த நபர் கடந்த வாரம் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரது செல்போனை பறித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணும் காதலனின் செல்போனை பறித்து, கீழே போட்டு உடைத்து உள்ளார்.

இதனையடுத்து, இருவரும் மாறி, மாறி சண்டை போட்டு கொண்டதாகவும், மீண்டும் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த ஜெயகோகுல்ராம் தன்னை காதலிக்கவில்லை என்றால் இருவரும் காதலிக்கும்போது எடுத்த புகைப்படங்களை, வாட்ஸ்-அப், பேஸ் புக் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியும், தனது செல்போனை உடைத்ததற்கு ரூ.1.50 லட்சம் தர வேண்டும் என மிரட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து மிரட்டிய காதலனிடம் விசாரித்து வருகின்றனர்.

The post காதலிக்கும்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய காதலன்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...