×

பொள்ளாச்சி அருகே ரோடு விரிவாக்க பணிக்காக ராட்சத மரங்கள் அகற்றம்

*போக்குவரத்து கடும் பாதிப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே சாலை விரிவாக்க பணிக்காக ராட்சத மரங்கள் வெட்டி அகற்றப்படுகிறது. இதனால் நேற்று நடுரோட்டில் மரம் விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகரம் வழியாக, வெளியூர்களுக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்து விபத்து, போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட சம்பவத்தை கட்டுப்படுத்துவதற்காக, சில ஆண்டுக்கு முன்பு கிழக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.

அதன் பின்னர், கோவைரோடு சக்திமில் பிரிவிலிருந்து, ஆர்.பொன்னாபுரம், நல்லூர் பிரிவு, கிருஷ்ணாகுளம் அருகே, மீன்கரை ரோடு ஜமீன் ஊத்துக்குளி வரையிலும் என சுமார் ஒன்பரை கிலோ மீட்டர் தூரமுள்ள மேற்கு புறவழிச்சாலையை அகலப்படுத்தும் பணி அண்மையில் தொய்வடைந்தது. இதையடுத்து தற்போது அப்பணியை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, ரோட்டோரம் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடக்கிறது. இதில், நல்லூர் பிரிவிலிருந்து மீன்கரை ரோடு ஜமீன் ஊத்துக்குளி பிரிவு வரையிலும் ரோடு அகலப்படுத்தும் பணி நடக்கிறது. அதிலும், நல்லூர் பிரிலிருந்து ஜமீன்ஊத்துக்குளி கிருஷ்ணாகுளம் வழியாக ஜமீன் ஊத்துக்குளி கைக்காட்டி வரையிலும் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடு விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ரோடு அகலப்படுத்த தேவையான இடத்திற்காக, அப்பகுதி ரோட்டோரம் இருக்கும் சுமார் 50க்கும் மேற்பட்ட பழமையான ராட்சத மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தும் பணி ஒரு மாதத்திற்கு முன்பு துவங்கப்பட்டது.

அதிலும், பல்வேறு இடங்களில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான புளியமரங்கள் அடியோடி வெட்டி அகற்றப்படுவது தெரிய வந்துள்ளது. இதனால், ரோட்டோரம் இருபுறமும் பெரும்பகுதி தற்போது திறந்தவெளியாக உள்ளது. இதில் நேற்று, நல்லூர் பிரிவில் இருந்து கிருஷ்ணாகுளம் செல்லும் வழியில் மரங்கள் வெட்டி அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது சில புளியமரங்கள் வெட்டி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

இதில், சுமார் 100 ஆண்டு கடந்த மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது, ஒரு புளியமரம் வேரோடு அப்புறப்படுத்தப்பட்டது. அந்த மரம் ரோட்டில் முழுமையாக விழுந்ததால் ரோட்டின் இருபுறமும் வந்த வாகனங்கள் ஆங்காங்கே நின்று கொண்டது. வேரோடு அகற்றப்பட்ட மரத்தை அப்புறப்படுத்திய பிறகே, அவ்வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனாலும், உறுதியாக இருந்த பழமையான மரங்கள் வெட்டி அப்புறப்படுத்துவதை கண்டு தன்னார்வலர்கள் பெரும் வேதனை அடைந்தனர்.

The post பொள்ளாச்சி அருகே ரோடு விரிவாக்க பணிக்காக ராட்சத மரங்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...