×

பிஞ்சு மனங்களில் நஞ்சு கலக்கக்கூடாது; அடித்தட்டு மக்களின் மனதில் சாதி பாகுபாடுகளை விதைக்க கூடாது: கவிஞர் வைரமுத்து வலியுறுத்தல்

சென்னை: பிஞ்சு மனங்களில் நஞ்சு கலக்கக்கூடாது; அடித்தட்டு மக்களின் மனதில் சாதி பாகுபாடுகளை விதைக்க கூடாது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். நாங்குநேரி கொடூரம் குறித்து கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நாட்டில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம். கல்விக் கூடங்கள் சாதிகளை ஒழிக்க பிறந்த மன மருத்துவ நிலையங்கள். சாதிகளை ஒழிக்க பிறந்த நிலையங்களிலேயே சாதி தலைதூக்குவதை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. சாதி என்பதை ஒரு அடையாளம் என்ற அளவில் மட்டும் கருதினால் போதும். அதற்கு பெருமையோ இழிவுவோ கொடுக்க வேண்டாம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்திருக்கிறார்.

நாங்குநேரி சம்பவம்:

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 17). தங்கை பெயர் சந்திரா செல்வி. இருவரும் வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகின்றனர். சின்னத்துரை 12ம் வகுப்பு படித்து வருகிறார். சின்னத்துரையை அவருடன் படிக்கும் மாணவர்கள் சாதிய பாகுாட்டை காட்டி படிக்கவிடாமல் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சின்னத்துரை மனம் உடைந்து பள்ளி செல்லாமல் இருந்தார். இதுபற்றி அறிந்த பள்ளி நிர்வாகம் சின்னத்துரையை துன்புறுத்திய மாணவர்களை எச்சரித்தது.

இந்த கோபத்தில் சில மாணவர்கள், சின்னத்துரையின் வீட்டுக்கு சென்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். தடுக்க சென்ற தங்கை சந்திரா செல்வியையும் அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். இருவரும் மீட்கப்பட்டு தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்களே சாதிய போக்குடன், தன்னுடன் படித்த சக மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம், தமிழ்நாடு முழுவதும் அதிர வைத்தது நினைவுகூரத்தக்கது.

The post பிஞ்சு மனங்களில் நஞ்சு கலக்கக்கூடாது; அடித்தட்டு மக்களின் மனதில் சாதி பாகுபாடுகளை விதைக்க கூடாது: கவிஞர் வைரமுத்து வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Poet Vairamuthu ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...