![]()
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்த சுதந்திர தினவிழாவில் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. காலை 8.55 மணிக்கு காந்தி சிலை அருகே முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி நடந்து சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு சுதந்திர தின பேருரையாற்றினார். பின்னர் காவல்துறை உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பதக்கம் மற்றும் விருதுகளை வழங்கினார்.
ஆளுநர் தமிழிசை விருந்து: திமுக, காங். புறக்கணிப்பு
புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ராஜ்நிவாஸில் நேற்று காலை 9 மணிக்கு தேசிய கொடி ஏற்றி வைத்து, அங்கு காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதில் கவர்னர் மாளிகை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். சுதந்திர தினவிழாவை முன்னிட்டு புதுச்சேரி ராஜ்நிவாஸில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு நேற்று மதியம் விருந்தளித்தார். இதில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் என்ஆர் காங்கிரஸ், பாஜ எம்எல்ஏக்கள், நியமன உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது முதல்வர், சபாநாயகர் உள்ளிட்ட விஐபிக்களுக்கு கவர்னர் தமிழிசை உணவுகளை பரிமாறினார். பிரதான எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ் கட்சிகள் பங்கேற்காமல் புறக்கணித்தன.
ராகுல்காந்தி வாழ்க என தாலி கட்டிய மணமகன்
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தினவிழாவையொட்டி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி காங்கிரஸ் கொடியை ஏற்றினார். இதை தொடர்ந்து காங்கிரஸ் அலுவலகத்தில் பிரகாஷ், மற்றும் அன்பரசி ஆகியோரது திருமணம் நடந்தது. ராகுல்காந்தி வாழ்க என முழக்கமிட்டபடி அன்பரசியின் கழுத்தில், பிரகாஷ் தாலியை கட்டினார். விழுப்புரம் மாவட்டம் வி.புதூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ், வேலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுகிறார். புதுச்சேரி ஆண்டியார்பாளையத்தை அன்பரசி, புதுவை மாநிலம் திருபுவனையில் தனியார் மருந்து கம்பெனியில் பணியாற்றுகிறார்.
The post புதுவையில் சுதந்திர தினவிழா உற்சாகம்: முதல்வர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றினார் appeared first on Dinakaran.
