சென்னை: தமிழ்நாட்டில் 10 ரயில் நிலையங்களில் அதிக குற்றச்செயல்கள் நடைப்பெறுவதாக ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தெற்கு ரயில்வேயின் கீழ் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் என 6 ரயில்வே கோட்டங்கள் உள்ளன. அதில், 725 ரயில் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு, செல்போன், நகை பறிப்பு நடக்கிறது. மேலும், கஞ்சா, அரிசி கடத்தல் சம்பவங்களும் நடக்கிறது. இதுபோன்ற குற்றச்செயல்களை கட்டுப்படுத்த ரயில் நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே போலீசார் தெரிவிக்கையில்: தமிழ்நாட்டில் அதிக குற்றச்செயல்கள் நடைபெறும் ரயில் நிலையங்களாக சென்னை சென்ட்ரல், எழும்பூர், கொருக்குப்பேட்டை, தண்டையார் பேட்டை, பெரம்பூர், தாம்பரம், காட்பாடி, அரக்கோணம், சேலம், ஈரோடு ஆகிய 10 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு வெளிமாநில ரயில்கள் அதிகம் வந்து செல்வதால் குற்றச் செயல்கள் அதிகமாக நடைபெறுகின்றன. மேற்படி ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸ் நியமிக்கப்பட்டு கண்காணிப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மாதமாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். தற்போது இருக்கும் எண்ணிக்கையை விட கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். இவ்வாறு ரயில்வே போலீசார் கூறினர்.
The post தமிழ்நாட்டில் 10 ரயில் நிலையங்களில் அதிக குற்றம் நடக்கிறது: ரயில்வே போலீசார் தகவல் appeared first on Dinakaran.
