![]()
புதுடெல்லி: பிரியங்கா காந்தி மக்களவையில் இருக்க வேண்டியவர். அதற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளது என்று அவரது கணவர் ராபர்ட் வதேரா கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா பேசியதாவது: நான் அரசியலில் இல்லாத நிலையிலும் அமைச்சர் ஸ்மிருதி இரானி அதானியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை நாடாளுமன்றத்தில் காட்டினார். அதானியுடன் ஏதாவது வர்த்தக தொடர்பு வைத்திருக்கிறேன் என்பதை அவரால் ஆதாரப் பூர்வமாக நிரூபிக்க முடியுமா? இல்லையென்றால், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அதானியின் விமானத்தில் பிரதமர் மோடி அமர்ந்திருக்கும் புகைப்படம் கூட உள்ளது.
அது பற்றி ராகுல் கேட்டால் தற்போது வரை ஏன் பதிலளிக்கவில்லை? மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்திய போது அவர்களை சந்திக்காத அமைச்சர் அதுவும் பெண்கள் நலத்துறை அமைச்சரான இரானி மணிப்பூர் பற்றி எரிவது குறித்து பேச மறுக்கிறார். இந்த அரசு ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், என் மீது குற்றம் சாட்டுவதிலேயே குறியாக உள்ளது. இந்தியா கூட்டணியின் பெயர் நன்றாக உள்ளது. சிறந்த மதசார்பற்ற, முற்போக்கான, ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்க மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாய்ப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். பிரியங்கா காந்தி சிறப்பாக செயல்படுகிறார். அவர் நிச்சயமாக மக்களவையில் இருக்க வேண்டியவர். அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு உள்ளது. இதனை ஏற்றுக் கொண்டு கட்சி அவருக்கு சிறந்ததை செய்யும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post காங்கிரஸ் சிறந்ததை செய்யும் பிரியங்காவுக்கு அனைத்து தகுதியும் உள்ளது: ராபர்ட் வதேரா பேட்டி appeared first on Dinakaran.
