![]()
சென்னை: ‘நீட் மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் வழங்குவீர்கள்’ என நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியின் பெற்றோர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, ஒருபோதும் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்றும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் கடைசி நபராக தான் நான் இருப்பேன் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கேள்விகளை எழுப்பியதால், ஆவேசமடைந்த கவர்னர், கோபத்தில் கத்தியபடி பதில் அளித்தார். பெற்றோரிடம் இருந்த மைக் பிடுங்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். இதற்காக, ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், ‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்று சட்டசபையில் 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த மசோதா தொடர்பாக அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் அடிக்கடி ஆளுநர் மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், கடந்த 2022ம் மசோதாவில் கையெழுத்திடாமல் அவையின் மறுபரிசீலனைக்கு கவர்னர் ரவி, அரசுக்கே விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார். பின்னர் 2022ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில், ‘நீட் விலக்கு மசோதா’ மீண்டும் நிறைவேற்றப்பட்டு, அன்றே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும், அந்த மசோதாவில் கவர்னர் கையெழுத்திடாமல், சில சந்தேகங்களை கேட்டார். அந்த சந்தேகங்களுக்கு தமிழக அரசு விரிவான விளக்கம் அளித்தது. அதன் பிறகு நீட் விலக்கு மசோதாவை கவர்னர், ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார்.
இப்போது நீட் விலக்கு மசோதா குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் மூலமாக தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது. அதற்கும் தமிழக அரசு பதில் கடிதம் அனுப்பியது. தற்போது குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. இந்தநிலையில், சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் நேற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து மாணவர்களிடம் ஆளுநர் ரவி பேசுகையில், ‘‘நீட் தேர்வில் வெற்றி பெற்று இந்த நாடு, மாநிலம் மற்றும் உங்களை சார்ந்த அனைவரையும் பெருமைபடுத்தியுள்ளீர்கள்.
தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கண்டனங்களும், கூக்குரல்களும் மாணவர்கள் தற்கொலை செய்வதாக பயமுறுத்தியும், நீட் ஒரு அரக்கன், அழித்துவிடும் என கூறி வந்தனர். ஆனால் நீங்கள் அதை தகர்த்துள்ளீர்கள்’’ என்று பேசினார். இதைத் தொடர்ந்து மாணவர்களிடம் கவர்னர் கலந்துரையாடினார். அப்போது சேலத்தை சேர்ந்த மாணவியின் தந்தை அம்மாச்சியப்பன் ராமசாமி, கடந்த 5 ஆண்டுகளாக நீட் தேர்வில் எப்படி தேர்ச்சி பெறுவது என்பது தெரியாத நிலை இருந்தது. தற்போது மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது சாதனையே. ஆனால் ஒரு பெற்றோராக உங்களிடம் ஒரு கேள்வியை கேட்கிறேன். எப்போது நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவீர்கள் என்றார்.
இதை எதிர்பார்க்காத ஆளுநர், திடீரென மாணவியின் பெற்றோர் கேட்டதால், ஆக்ரோஷமாக, மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் அளிக்க மாட்டேன். நம் மாணவர்கள் போட்டியிட்டு சிறந்தவர்களாக விளங்க வேண்டும். நம் மாணவர்கள் அதை நிரூபித்துள்ளனர்’’ என்று கவர்னர் டென்ஷனுடன் பதில் அளித்தார். தொடர்ந்து மாணவியின் தந்தை அம்மாச்சியப்பன், ‘‘நம் மாணவர்கள் நீட் தேர்வில் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்புகள் சிறந்து விளங்குவதாக கூறினீர்கள். இவையெல்லாம் நீட் வருவதற்கு முன்பே தமிழகத்தில் சாதித்துவிட்டோம்’’ என கூறினார். உடனே ஆளுநர் ‘‘தற்போது நாம் செய்த சாதனைகள் போதுமானதாக இருக்காது, நீட் இல்லாமல் அது எதிர்காலத்துக்கு போதுமானதாக இருக்காது’’ என கோபமாக கூறி அவரை அமரும் படி கூறினார்.
பின்னர் மீண்டும் மாணவியின் தந்தை, ‘‘பல பெற்றோரால் நீட் பயிற்சிக்கு அனுப்ப பணம் செலவு செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர். அதனால் நீங்கள் பரிசீலிக்க வேண்டும்’’ என கூறினார். அப்போது ஆளுநர், ‘‘நான் மிகவும் வெளிப்படையாகவே கூறுகிறேன். என்னால் நீட் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது. என்னிடம் கொடுத்தால் நான் ஒருபோதும் ஒப்புதல் அளிக்க மாட்டேன். பயிற்சி நிலையங்களுக்கு செல்லாமல் நீட் தேர்வில் பலர் வெற்றி பெற்றுள்ளனர். பல இடங்களில் பள்ளிகளில் தான் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகின்றனர். பயிற்சி நிலையங்களுக்கு சென்றால் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என கூறுவது கட்டுக்கதை.
சிபிஎஸ்இ பாட புத்தகங்களில் இருப்பது மட்டுமே போதுமானது, சிபிஎஸ்யின் தரநிலையே சிறந்ததாக விளங்குகிறது. அதற்கு ஈடான தர நிலை மாநில கல்வியில் இல்லை. அதை குறை கூறாமல் அதை சிபிஎஸ்இ அளவுக்கு உயர்த்த வேண்டும். நீட் தொடர்ந்து நாட்டில் நீடிக்கும்’’ என்று ஆளுநர் கோபமாக பேசியதை அடுத்து அங்கிருந்த ஆளுநர் மாளிகை ஊழியர்கள் அம்மாச்சியப்பனிடம் இருந்து மைக்கை பறித்தனர். நிகழ்ச்சிக்கு பின் மாணவியின் தந்தை அம்மாச்சியப்பன் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளிகளில் சொல்லிக்கொடுப்பதை மட்டுமே வைத்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது.
ஒவ்வொரு பள்ளியும் தனியாக பயிற்சி மையங்கள் மூலமாகவே பயிற்சி அளித்து தேர்ச்சி பெற வைக்கின்றனர். ஆண்டு தேர்வு மற்றும் நீட்டுக்கும் சேர்ந்து தான் பள்ளி மாணவர்களை தயார் செய்கின்றனர். கடந்த 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தமிழக மருத்துவமனைகள் சிறந்த கட்டமைப்புகளை கொண்டுள்ளது. அங்குள்ள மருத்துவர்கள் எந்த நீட் தேர்வு எழுதினர். அரசு பள்ளி மாணவர்கள் 652 மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என ஆளுநர் கூறுகிறார். அவர்கள் நீட் தேர்வு வாயிலாக சேரவில்லை 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் தான் சேர்ந்தார்கள். பெற்றோர்களிடம் இருந்த ஆதங்கத்தையே நான் ஆளுநரிடம் வெளிப்படுத்தினேன். ஆனால் நீட் விலக்கு மசோதாவை என்றும் ஏற்க மாட்டேன் என அவர் கூறியுள்ளார்’’ என்றார்.
The post நீட் தேர்வுக்கு ஏன் தடை விதிக்கவில்லை? கவர்னருடன் பெற்றோர் காரசார வாக்குவாதம்: கேள்வி கேட்டவரின் மைக் பறிப்பு கிண்டி ராஜ்பவனில் பரபரப்பு appeared first on Dinakaran.
