×

அமைச்சராக இருந்தபோது ஒன்றிய அரசை வலியுறுத்தாதது ஏன்? என்எல்சி போராட்டம் மூலம் கலவரத்தை தூண்டியுள்ளார்கள்: அன்புமணிக்கு அமைச்சர் காட்டமான பதிலடி

குறிஞ்சிப்பாடி: அமைச்சராக இருந்தபோது ஒன்றிய அரசை வலியுறுத்தாதது ஏன்?, என்எல்சி போராட்டம் மூலம் கலவரத்தை தூண்டி உள்ளார்கள் என்று அன்புமணிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று அளித்த பேட்டி: திமுக ஆட்சி காலத்தில் என்எல்சி நில எடுப்பு பிரச்னை அதிக அளவில் வருகிறது. நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்துக்காக எடுக்கப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடுகள் தி.மு.க ஆட்சியில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பா.ம.க. தலைவர் அன்புமணி மத்தியில் அமைச்சராக இருந்துள்ளார். அவர் கட்சியை சேர்ந்த சண்முகம் நிலக்கரி துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது ஒன்றிய அரசிடம் வலியுறுத்தாதது ஏன்?. என்.எல்.சி. நிறுவனத்தை நம்பி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். அன்புமணி என்.எல்.சி.யை வெளியேறு என்று பேசி வருகிறார். அவர்களது வாழ்வாதாரம் என்ன ஆகும். அன்புமணி தனது தோட்டத்தில் இவர்களுக்கு வேலை வழங்குவாரா?. போராட்டத்தின் மூலம் கலவரத்தை தூண்டி உள்ளார்கள். அமைதியாக இருந்த கடலூர் மாவட்டத்தை வெளியூர்களிலிருந்து ஆட்களை வரவைத்து கலவர பூமியாக மாற்றி விட்டு சென்றுள்ளார்கள். பாமக போராட்டத்துக்கு உள்ளூர் மக்கள் யாரும் ஆதரவு கொடுக்கவில்லை. ஆர்ப்பாட்டம் நடத்தும் அன்புமணி ஏன் கூட்டணியில் உள்ள ஒன்றிய அரசிடமும், ஒன்றிய அமைச்சர்களிடமும் முறையிடவில்லை. ஒரு கட்சி தலைவர் பொதுமக்களை கலவரத்துக்கு தூண்டுபவராக இருக்கக் கூடாது, தூண்டும் விதமாக பேசவும் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post அமைச்சராக இருந்தபோது ஒன்றிய அரசை வலியுறுத்தாதது ஏன்? என்எல்சி போராட்டம் மூலம் கலவரத்தை தூண்டியுள்ளார்கள்: அன்புமணிக்கு அமைச்சர் காட்டமான பதிலடி appeared first on Dinakaran.

Tags : union government ,NLC ,Anbumani ,Kurinchipadi ,Dinakaran ,
× RELATED ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின்...