×

பொள்ளாச்சி மாட்டுச்சந்தைக்கு 2 ஆயிரம் கால்நடைகள் வருகை

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் உள்ள மாட்டுச்சந்தை வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெறுகிறது. அவ்வாறு நடைபெறும் சந்தை நாளின்போது வெளிமாவட்டம், ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இங்கு விற்பனைக்காக கொண்டு வரும் பெரும்பாலான மாடுகளை, கேரள வியாபாரிகள் நேரில் வந்து குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்கின்றனர். கடந்த மாதம் துவக்கத்திலிருந்து அவ்வப்போது பெய்த பருவ மழையால், வெளி மாவட்டத்திலிருந்தும் சுற்றுவட்டார பகுதியிலிருந்தும் விற்பனைக்காக சுமார் 1000க்கும் குறைவான மாடுகளே கொண்டு வரப்பட்டன.

மேலும், அந்நேரத்தில் கேரள வியாபாரிகள் வருகை குறைவால் விற்பனை மந்தமாகி குறைந்த விலைக்கு விற்பனையானது. தற்போது மழை குறைவால், நேற்று நடந்த சந்தை நாளின்போது சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இருப்பினும், கேரள மாநில பகுதியிலிருந்து வியாபாரிகள் வருகை குறைவானது.

இதனால், கடந்த மாதத்தைவிட சற்று குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதில், பசுமாடு ஒன்று ரூ.30 ஆயிரத்துக்கும், காளைமாடு ரூ.32 ஆயிரத்துக்கும், எருமைமாடு ரூ.35 ஆயிரத்துக்கும், கன்றுக்குட்டிகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் என கடந்த சில வாரங்களை விட ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை என குறைந்த விலைக்கு போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post பொள்ளாச்சி மாட்டுச்சந்தைக்கு 2 ஆயிரம் கால்நடைகள் வருகை appeared first on Dinakaran.

Tags : Pollachi ,market ,Pollachi Cattle Market ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...