×

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய கடன், கல்விக்கடன் வழங்க வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்

*ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

திருவண்ணாமலை : விவசாய கடன் மற்றும் கல்விக் கடனுக்கு வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என வங்கியாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான வங்கியாளர்களின் சிறப்பு ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா.முருகேஷ், எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: வங்கி மேலாளர்கள் சமூக நோக்கத்துடன், மாவட்ட வளர்ச்சிக்காக செயல்பட வேண்டும். இந்த மாவட்டத்தின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும். நபார்டு வங்கியும், முன்னோடி வங்கியும் இணைந்து செயல்பட்டால், தாமதம் இல்லாமல் வளர்ச்சிப்பணிகள் நடைபெறும். காசோலை பயன்பாடு குறைந்து, ஆர்டிஜிஎஸ் எனும் பணபறிமாற்றம் நடைமுறைக்கு வந்துவிட்டது. எனவே, இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். பயனாளிகளுக்கு குறுஞ்செய்திகள் மூலம் தகவல்களை தெரிவிக்க வேண்டும்.

வங்கிகள் வழங்கும் கடன் திட்டங்களை மக்கள் தெரிந்துகொள்ள வசதியாக, வங்கிகளின் தகவல் பலகையில் தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும். அரசு எந்தெந்த வகையில் உதவுகிறது என்பதை மக்கள் தெரிந்துகொள்வார்கள். திருவண்ணாமலை மாவட்டம் விவசாயிகள் நிறைந்தது. செய்யாறு சிப்காட் தவிர, வேறு தொழிற்சாலைகள் இல்லை. எனவே, விவசாய கடன் வழங்க முன்வரவேண்டும். அதைத்தான் இந்த அரசு விரும்புகிறது. மகளிர் குழு கடன், கல்விக்கடன் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இந்த மாவட்டம் கல்வியில் பின்தங்கியிருக்கிறது. எனவே, கல்விக்கடன் வழங்குவது அவசியம். மாவட்டத்தில் உள்ள 35 கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் படிக்கும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கல்விக் கடன் வழங்க வேண்டும். மேலும், வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல்களையும் தர வேண்டும்.
ஆதி திராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக திமுக ஆட்சிகாலத்தில் கலைஞர் கொண்டுவந்ததுதான் தாட்கோ. எனவே, தாட்கோ கடன் வழங்க வேண்டும். சிபில் ஸ்கோர் காரணம் காட்டி கடன் வழங்க மறுக்கக்கூடாது.

மேலும், செங்கம் தாலுகா, கோலாப்பாடியில் அமைக்கப்பட்டுள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில் தொடங்குவோரை அடையாளம் கண்டு கடன் வழங்க வங்கிகள் முன்வரவேண்டும். நிலுவையில் உள்ள கடன் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருவண்ணாமலைக்கு ஏராளமான வெளி நாட்டினர் வருகின்றனர். குறிப்பாக, கிரிவலம் செல்லும் பக்தர்களில் 75 சதவீதத்தினர் ஆந்திரா, கர்நாடாக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, இந்த நகரின் வளர்ச்சிக்கு மாஸ்டர் பிளான் தயாரித்து நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. நகரின் வளர்ச்சிக்கு, வங்கிகள் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், டிஆர்ஓ பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் ரிஷப், மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், இரா.தரன், ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் அருண்பாண்டியன், முன்னோடி வங்கி மேலாளர் கவுரி மற்றும் பல்வேறு வங்கிகளின் மேலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய கடன், கல்விக்கடன் வழங்க வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Minister ,AV Velu ,Tiruvannamalai district ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...