- அரசு
- ராமநாதபுரம்
- ராமநாதபுரம் மாவட்டம்
- மண்டபம்
- RSMangalam
- தொண்டி
- சாயல்குடி
- Kamudi
- அபிராமம்
- முதுகுளத்தூர்
![]()
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, சாயல்குடி, கமுதி, அபிராமம் மற்றும் முதுகுளத்தூர் உள்ளிட்ட 7 பேரூராட்சிகள் உள்ளன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட பேரூராட்சிகள் அமைந்துள்ள இந்த ஊர்களுக்கு உள்ளூர் பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமமக்கள் கடைகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பஸ் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வந்து செல்கின்றனர்.
பொதுமக்கள் வசதிக்காக ஒவ்வொரு பேரூராட்சி பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொது கழிப்பறைகள் உள்ளன. பொதுவாக பொது கழிப்பறை என்றால் தூய்மையின்றி முகம் சுழிக்கும் அளவில் சுகாதாரக்கேடாக கிடப்பது, துர்நாற்றம் வீசுவது என்ற நிலை இருக்கும். ஆனால் தற்போது நிலைமை மாறி இருக்கிறது.இலவச கழிப்பறை மற்றும் குத்தகைக்கு விடப்பட்டுள்ள கழிப்பறைகளில் நாள் ஒன்றிற்கு 3 முறைக்கு மேல் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநாசி தெளித்தல், வாசனை திரவியங்கள் தெளித்தல் என தூய்மை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்க அந்தந்த கழிப்பறை நுழைவு பகுதிகளில் தமிழ்நாடு அரசு சார்பில் க்யூ.ஆர். கோடு ஸ்கேனர் வசதியுள்ள போர்டு வைக்கப்பட்டுள்ளது.
இதனை பொதுமக்கள் தங்களது போனில் ஸ்கேன் செய்து தமிழில் எழுதி புகார் தெரிவிக்கலாம். உடனடியாக சம்மந்தப்பட்ட பேரூராட்சிகளின் சுகாதார மேற்பார்வையாளர்கள், செயல் அலுவலர் முதல் உதவி இயக்குனர் வரை புகார் சென்று விடும். இதனையடுத்து குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்குள், அது விடுமுறை தினங்களாக இருந்தாலும் கூட குறைகள் நிவர்த்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
முதுகுளத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி கூறும்போது, முதுகுளத்தூரில் பஸ் ஸ்டாண்ட், தாலுகா அலுவலகம், காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பொது கழிவறைகளில் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள க்யூ.ஆர். கோடு ஸ்கேனர் வசதியுள்ள புகார் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. கழிவறை நாள் ஒன்றிற்கு 3 முறை தூய்மை பணி நடந்தாலும், ஏதேனும் குறைபாடுகள், சேவைகள் குறைவாக இருந்தால் பொதுமக்கள் உடனடியாக எழுத்து பூர்வமாக புகார் அளிக்கின்றனர்.
மேலும் கழிப்பறையின் உள் மற்றும் வெளி சுற்றுப்புற குறைகள், குத்தகை கழிப்பறைகளில் கட்டணம் குறித்த புகார் எதுவாயினும் புகார் தெரிவிக்கலாம். இந்த முறையில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். உடனடியாக குறைகள் சரி செய்யப்பட்டுள்ளது என்றார்.
முதுகுளத்தூர் பஸ் பயணிகள் கூறும்போது, பொது கழிப்பறை என்றால் சில குறைகள் இருப்பது வழக்கம். இந்த நிலையில் க்யூ.ஆர் ஸ்கேனர் முறை இருப்பதால் புகார்களை தெரிவிக்க உதவியாக இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு புகார் அளிக்க உதவியாக இருக்கிறது. இந்த முறை தொடர்ந்து நடைமுறையில் இருந்தால் குறைகள் குறைந்து விடும். தூய்மையாகவும் இருக்கும் என்றனர்.
The post கழிப்பறை குறித்து புகார் தெரிவிக்க பேரூராட்சிகளில் புதுமையை புகுத்திய அரசு appeared first on Dinakaran.
