×

டெல்லியில் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு

புதுடெல்லி: டெல்லி வந்த தமிழ்நாட்டு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமானவரித்துறை நிர்வாக தலைவர் ஆகியோரை நேற்று நேரில் சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதில், “ஒன்றிய நிதி அமைச்சரை சந்தித்த போது தகவல் பரிமாற்றத்திற்கான கோரிக்கை வைக்கப்பட்டது. வருமானவரி கட்டுபவர்களின் தகவல் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டால் அதை வைத்து நலத்திட்டங்கள் மற்றும் பல சேவைகளுக்கு உரியவர்களை சென்றடையச் செய்யலாம். இதற்கான விவரங்களை கேட்டு பல மாதங்களாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் சுமார் 35லட்சம் வருமான வரி செலுத்தியவர்களின் தகவல்கள் தற்போது பெறப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் பல திட்டங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

குறிப்பாக தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமை திட்டம் உட்பட அனைத்துக்கும் பயன் உள்ளதாக இருக்கும். இது தொழில்நுட்பத்துறையில் இருக்கும் டி.என்.இ.ஜி.ஏ என்ற நிறுவனத்தில் இருந்து தான் அந்த தகவல்கள் அனைத்தும் பரிமாற்றம் செய்யப்பட்டு, அதிலிருந்து ஆராய்ந்து விதிமுறைகளுக்கு யார் உட்பட்டு இருக்கிறார்கள், யார் இல்லை என்று ஆராய்வு செய்கிறோம். எனவே இந்த முன் மாதிரியான திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாட்டுக்கு நாங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று செய்து கொடுத்தமைக்காக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மற்றும் வருமானவரித்துறை நிர்வாகத்தின் தலைவர் ஆகியோரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக ஏதேனும் மேலும் உதவி தேவைப்படும் படசத்தில் தொடர்ந்து எங்களிடம் கேளுங்கள், முடிந்த அளவுக்கு செய்து கொடுக்கிறோம் என நிதி அமைச்சர் என்னிடம் உறுதியளித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

The post டெல்லியில் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Palanivel Thiagarajan ,Nirmala Sitharaman ,Delhi ,New Delhi ,Tamil Nadu Information Technology ,BDR Palanivel Thiagarajan ,Union Finance ,Income Tax Department ,
× RELATED பேருந்து சேவை இல்லாமல் மெட்ரோ ரயில்...