அகமதாபாத்: காதல் திருமணத்திற்காக பெண்கள் வீட்டை விட்டு ஓடுவதை தடுக்க புதிய சட்டத்தை கொண்டு வர குஜராத் மாநில அரசு ஆலோசித்து வருவதாக அம்மாநில முதல்வர் கூறினார். குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் சர்தார் படேல் குழுமம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‘காதல் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு ஓடும் பெண்கள் தொடர்பான சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல் என்னிடம் கூறினார்.
காதல் திருமணத்தில் சம்பந்தப்பட்ட பெற்றோரின் சம்மதம் அவசியம் என்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. காதல் திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று படேல் சமூகத்தினரின் ஒருபிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசியலமைப்பு ரீதியாக அதற்கான சாத்தியம் இருந்தால், இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்படும். அப்போது சரியான முடிவுகளை அரசு எடுக்கும்’ என்றார். முதல்வர் பூபேந்திர படேலின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ இம்ரான் கெடவாலா ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘காதல் திருமணத்திற்கு பெற்றோரின் அனுமதி கட்டாயம் என்ற ஒரு சட்டத்தை அரசு கொண்டு வந்தால், அதற்கு நான் ஆதரவு அளிப்பேன். வரும் சட்டசபை கூட்டத்தொடரில், அதற்கான சட்டத்தை கொண்டு வரவேண்டும். அப்போது நான் அரசுக்கு ஆதரவாக இருப்பேன்’ என்றார்.
The post பெண்கள் வீட்டை விட்டு ஓடுவதால் காதல் திருமணத்திற்கு பெற்றோர் அனுமதி கட்டாயம்?: புதிய சட்டம் கொண்டு வர குஜராத் அரசு முடிவு appeared first on Dinakaran.
