![]()
கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்லும் கட்டணத்தை வனத்துறை உயர்த்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் சுற்றுலாப்பயணிகளின் வருகை இருந்து கொண்டே இருக்கும். இங்கு வனத்துறையின் கட்டுப்பாட்டில் பல சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இதில் முக்கியமானதாக இருப்பது பேரிஜம் ஏரி. இந்த பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகள் வனத்துறை அலுவலகத்தில் சிறப்பு அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதி பெறுவதற்கு வனத்துறை தரப்பில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒரு காருக்கு ரூ.200, ஒரு வேனுக்கு ரூ.300 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கொடைக்கானல் வனச்சரக மாவட்ட வன அலுவலராக கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய அதிகாரி பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்றவுடன் தற்போது கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்வதற்கு கார் ஒன்றுக்கு ரூ.300 மற்றும் வேன் ஒன்றுக்கு ரூ.600 என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திடீர் கட்டண உயர்விற்கு கொடைக்கானல் சுற்றுலா டாக்சி வேன் ஓட்டுனர்கள், சுற்றுலாப்பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
The post கொடைக்கானலில் பேரிஜம் ஏரிக்கு செல்ல கட்டணம் திடீர் உயர்வு: சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி appeared first on Dinakaran.
