நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி வளர்ந்து வரும் மாநகர் ஆகும். சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதியாக விளங்கி வருகிறது. நாகர்கோவில் மாநகரின் மக்கள் தொகை சுமார் மூன்றரை லட்சத்தை நெருங்கி உள்ளது. இங்குள்ள மக்களின் மிகப்பெரிய பிரச்சினை போக்குவரத்து நெருக்கடி ஆகும். நகருக்குள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ப பார்க்கிங் வசதிகள் கிடையாது. வர்த்தக நிறுவனங்கள் முதல் பார்க்கிங் இல்லாமல் தான் கட்டப்பட்டு உள்ளன. மேலும் சில வணிக நிறுவனங்கள் பார்க்கிங் பகுதியை குடோனாக பயன்படுத்துகிறார்கள். இதனால் சாலைகளில் தான் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதன் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மக்களின் அடிப்படைத் தேவையான நடைபாதை மாநகரின் பெரும்பாலானப் பகுதிகளில் கிடையாது. பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள், பரபரப்பான சாலைகளில் தான் நடந்து சென்றாக வேண்டும். அந்த சாலைகளில் கணக்கிலடங்கா வாகனங்கள் செல்வதால் நடந்து செல்பவர்கள் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது. நாகர்கோவில் மாநகரில் நீதிமன்ற சாலையில் நடைபாதை உள்ளது. மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மரால் இந்த நடைபாதையை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. மேலும் நடைபாதை ஆக்கிரமித்து வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. இதே போல் வடசேரி உழவர் சந்தை சாலையிலும் நடைபாதை உள்ளது. ஆனால் நடைபாதை முழுமை அடையவில்ைல. நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட பலரால் நடைபாதை இல்லாமல் போய் விடுகிறது.
நகரின் பெரும்பாலானச் சாலைகளில் நடைபாதை வசதி இல்லாததால் மக்கள் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. நடைபாதை இருந்தால் கடைக்காரர்கள் அவற்றை ஆக்கிரமித்து, விளம்பரப் பதாகைகளையும், தங்கள் பொருட்களையும், வாகனங்களையும் வைத்துக் கொள்கிறார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக மாநகராட்சி மேயர் மகேஷ் முழுமையாக ஆய்வு செய்து, மாநகரில் நடைபாதை அமைக்கும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக நாகர்கோவில் மாநகர மக்கள் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் கூறுகையில், குடிமை சமூக உறுப்பினர்கள் சிலரும், சமூக ஆர்வலர்களும் இணைந்து மாநகரெங்கும் சாலைகளில் நடந்து சென்று ஆய்வுசெய்யத் திட்டமிட்டிருக்கிறோம்.
மேயர், மாநகராட்சி உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் அவரவர் பகுதி சாலைகளில் நடந்துசென்று ஆய்வுசெய்ய வேண்டுகிறோம். குறிப்பிட்ட காலத்துக்குள் எங்கெங்கு நடைபாதைகள் அமைக்க முடியுமோ, அங்கெல்லாம் அவற்றை அமைக்கக் கோருகிறோம். நடைபாதைகளை ஆக்கிரமிக்கும் நிறுவனங்கள், பொதுமக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் போன்றோரிடம் முறையிடத் திட்டமிடுகிறோம். இவற்றுக்கான தேதிகள், விபரங்களை விரைவில் வெளியிடுவோம் என்றார்.
The post நாகர்கோவிலில் சாலைகளில் நடைபாதைகள் அமைக்கப்படுமா?… பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.
