×

இந்த வார விசேஷங்கள்

22.7.2023 – சனி
திருஆடிப்பூரம்

ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். உத்தராயணக் காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் ஆடிப்பூர விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம். நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல, கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டுகளித்திடும் நாள் ஆடிப்பூரம்.

மாலை நேரங்களில் அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையல்கள் பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன. ஆடி சந்திரனுக்குரிய மாதம். பூரம் சுக்கிரனுக்குரிய நட்சத்திரம். மஹாலஷ்மிக்குரிய நட்சத்திரம். மஹாலஷ்மியும் சந்திரனும் பாற் கடலில் தோன்றியவர்கள் என்பதால் சகோதரிகள். எல்லாப் பெருமாள் கோயில்களிலும் ஆடிப்பூரம் களை கட்டும். 22ஆம் தேதி ஆண்டாளுக்கு திருத்தேர் உற்சவம் நடைபெறும். லட்சக்கணக்கான மக்கள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் குழுமி தேர் வடம் இழுப்பார்கள். திருமாலிருஞ் சோலை கள்ளழகர், ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் மாலை பரிவட்டம் ஆண்டாளுக்கு அனுப்பப்படும். 23ம் தேதி ஸ்ரீஆண்டாள் முத்துக்குறி கேட்கும் நிகழ்ச்சி.

அரையர் சேவை அதி அற்புதமாக இருக்கும். சில இடங்களில் ஆடிப்பூரம் முளைப்பாலிகை திருவிழாவாகவும் கொண்டாடப்படுகின்றன. ஒரு வாரத்திற்கு முன்னரே அவரவர் இல்லங்களில் நவதான்யங்களை விதைத்து முளைப்பாலிகையை தயார் செய்கின்றனர். திருஆடிப்பூரத் தன்று அவை அம்மன் சந்நதியில் சேர்க்கப்படுகின்றன. முளை வளர்ந்துள்ள விதத்தில் இருந்து வருடம் எவ்வளவு செழிப்பாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றது என்பது ஐதீகம்.

திருவாரூர் கமலாம்பாள், நாகை நீலாயதாட்சி, திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை போன்ற பல திருத்தலங்களில் 10 நாள் பிரம்மோற்சவமும் திருமயிலைக் கற்பகவல்லிக்கு ஆடிப் பூரத்தன்று மதியம் சந்தன காப்பு அலங்காரமும், இரவு வளையல் அலங்காரமும் நடைபெறுகிறது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்ம னுக்கு கூழ்வார்க்கும் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த அற்புத திருநாளில் ஏழை, எளிய சுமங்கலிப் பெண்களுக்கு புடவை. குங்குமம், மஞ்சள், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பதும் உண்டு.அம்மன் கோயிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ள பெண்கள், தங்களின் வீடுகளில் பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு, பட்டு வஸ்திரம், வளையல் பூக்கள் படைத்து வணங்கலாம். இளம்பெண்கள், திருமணமான பெண்களுக்கு வளையல் கொடுத்தால் நம்முடைய வீட்டிலும் வளைகாப்பு நடைபெறும் என்பது நம்பிக்கையாகும். அன்னைக்கு பிரியமான பிரசாதமாக பானகம், நீர் மோர், சர்க்கரைப் பொங்கல். கூல், ஆகியவற்றை படைத்து வேண்டிக்கொண்டால் சகலவிதமான நன்மை களையும் பெறலாம்.

25.7.2023-செவ்வாய்
பெருமிழலைக் குறும்பர்

பெருமிழலைக் குறும்ப நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சிவநெறியை உயிரின் மூச்சாகக் கொண்டவர்.
சிவனடியார்க்கான திருப்பணிகளை விருப்பமுடன் செய்பவர்; சிவபெருமான் திருவடிகளை நெஞ்சத்தாமைரையில் இருத்தி வழிபாடு செய்பவர்.

இடுக்கண்பட்டிருக்கினு மிரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.

– என்று சதா சர்வகாலமும் இறைவனது திருவைந்தெழுத்தினை இடைவிடாது நினைந்து போற்றுபவர். இவ்வாறு சிவபத்தியிலும், சிவனடியார் பத்தியிலும் சிறந்து வாழும் பெருமிழலைக் குறும்பர், திருத்தொண்டத்தொகை பாடிய சுந்தரர் பெருமையைக் கேள்வி யுற்றார். அவரைப் பணிந்து அவருடைய திருவடிகளை நினைந்து போற்றுதலை நியமமாகக் கொண்டார். சுந்தரர் திருவடிகளைக் கையால் தொழுது, வாயால் வாழ்த்தி, மனதால் நினைக்கும் இதுவே சிவபெருமான் திருவடிகளை அடைவதற்குரிய நெறியாகும் என்று மேற்கொண்டார். எட்டு விதமான சித்திகளும் கைவரப்பெற்றார்.

இத்தகைய நியமங்களையுடையாராய்ப் பெருமிழலைக்குறும்பர் வாழ்ந்துவரும் நாளில், சுந்தரமூர்த்தி நாயனார் திருவஞ்சைக்களத்திற்கு சென்று திருப்பதிகம் பாட அவருக்குச் சிவபெருமான் அருளால் வடகயிலை அடையும் பேறு மறுநாள் கிடைக்க இருப்பதனைத் தம்முடைய ஊரில் இருந்து கொண்டே யோகக் காட்சியால் அறிந்து கொண்டார்.

தனது குரு, சுந்தரர் இல்லாத இந்த உலகில், தான் வாழாது சிவபதம் அடைவேன் என்று வைராக்கியத்தோடு ஐந்தெழுத்து ஓதி தவ நிலையில் பிரம்ம கபாலம் வழியே மின்ன போல் உயிர் உடலின்றும் பிரிந்து திருக்கயிலை வீற்றிருந்து அருளும் சிவபெருமானது திருவடி நீழலை அடைந்தார். அவர் குரு பூஜை இன்று ஆடி சித்திரை. “பெருமிழலைக் குறும்பர்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை.

26.7.2023 – புதன்
சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை

பித்தா! பிறை சூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்?
மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால்
வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய்
இனி அல்லேன் எனல் ஆமே?

– என்று பாடியவர் சுந்தரர். தம்பிரான் தோழர். பல அடியார்களின் வாழ்வு நாயன்மார்களின் வாழ்வு சுந்தரர் வாழ்வோடு தொடர்புடையது. ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் சுந்தரரின் குருபூஜை எல்லா சிவாலயங்களிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். குறிப்பாக தொண்டை மண்டலத்தில் உள்ள திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் இன்று சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் குரு பூஜைத் திருவிழா நடைபெறுகிறது. காலையில் விருந்திட்டீஸ்வரர், சுந்தரருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனையும், மதியம் திருக் கயிலாய காட்சி வைபவமும் நடைபெற உள்ளது. இங்குதான் சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளுக்கு ஈஸ்வரன் அன்னமிட்டார்.

உலகுக்கே படி யளக்கும் பரமேஸ்வரன் தனது நண்பன் சுந்தரருக்காக தானே பிட்சையெடுத்து விருந்திட்ட லீலை இங்கு நடந்தது. தேவார மூவரில் இவர் பாடிய பாடல்கள், ஏழாம் திருமுறையாக உள்ளன. கயிலாயத்தில் ஈசனுக்குத் தொண்டராக இருந்தவர். பெருகி வந்த ஆலகால விஷத்தைத் திரட்டிக்கொடுத்து `ஆலால சுந்தரர்’ என்ற பெயரைப் பெற்றவர்.பண்ருட்டி அருகே திருநாவலூரில் சடை யனார்-இசை ஞானியார் தம்பதியின் மகனாகப் பிறந்து, திரு முனைப்பாடி நாட்டு அரசரான நரசிங்க முனையரையருக்கு வளர்ப்பு மகனாக வளர்ந்தவர். திருமண வேளையில் ஈசனால் ஆட்கொள்ளப் பட்டவர் சுந்தரர்.

இதே நாள் (ஆடி சுவாதி) சேரமான் பெருமாள் நாயனாருக்கும் குரு பூஜை. இவர் சேர நாட்டு மன்னன். மகோதை என்னும் ஊரில் இருந்துகொண்டு கி.பி. 871 ஆண்டுகளைச் சார்ந்து அரசாண்டவர். பெருமாக்கோதையார் என்ற இயற்பெயரும் கழறிற்றி வார் என்ற சிறப்புப் பெயரும் பெற்ற இவர் 63 நாயன்மார்களில் ஒருவராகச் சேர்க்கப்பட்டபோது சேரமான் பெருமாள் நாயனார் என வழங்கப்பட்டார். இவர் சிவ பூஜையின்போது தில்லை நடராசப் பெருமானின் மணியோசையைக் கேட்கும் பேறு பெற்றிருந்தார் என்றும், அதனால் கழறிற்று அறிவார் எனப் போற்றப்பட்டார் என்றும் பெரிய புராணம் குறிப்பிடுகிறது. சுந்தரர் குரு பூஜையோடு இவர் குரு பூஜையும் இணையும்.

சுந்தரரை நம்பி ஆரூரார் என்றும் அழைப்பார்கள். அவர் வாழ்ந்த திருவாரூரில், தியாகேசர் திருத்தலத்தில் இன்று காலை சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும். சுந்தரரின் உத்ஸவத் திருமேனிக்கு அபிஷேகங்கள் செய்யப்படும். அதையடுத்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்படும் . இதேபோல் சேரமான் நாயனாருக்கும் இன்று குருபூஜை. எனவே அவரின் உத் சவத் திருமேனிக்கும் பூஜைகள் செய்யப்படும். இதையடுத்து வெள்ளை யானை வாகனத்தில் சுந்தரரும், குதிரை வாகனத்தில் சேரமான் நாயனாரும் வீதியுலா வருவார்கள். நான்கு வீதிகளிலும் உலா வரும் காட்சி அற்புதமாக இருக்கும்.

சென்னை மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலிலும், சுந்தரர் குருபூஜை விழா சிறப்புற நடைபெறும். இங்கேயும் உற்சவருக்கு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு வீதியுலா வைபவம் விமரிசையாக நடக்கும். மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயில், திருச்சி தாயுமானவசுவாமி கோயில், திருவையாறு ஐயாறப்பர் கோயில், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் முதலான பல சிவாலயங்களில் சுந்தரர் குருபூஜை கோலாகலமாக நடைபெறும்.

27.7.2023 வியாழன்
குதம்பை சித்தரின் தரிசனம் மயூரநாதர் திருக்கோயில்

சித்தர்கள் வாழ்த்த நாடு நம் நாடு.அவர்கள் மக்கள் நல்வாழ்க் கைக்காக பல அற்புதங்கள் செய்ததோடு யோகக்கலையையும் மருத்துவக்கலையையும் வளர்த்தனர்.அப்படிப்பட்ட சித்தர்களில் ஒருவர் குதம்பை சித்தர். ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 1800 ஆண்டுகள் 16 நாள் ஆகும் குதம்பைச் சித்தரின் பாடல் கண்ணிகளில் ‘குதம்பாய்’ என்ற ஈற்று சொல் வருகின்றது. ‘குதம்பை’ என்ற காதணி அணிந்த பெண்ணை முன்னிலைப்படுத்திப் பாடுவதாலும், காதில் குதம்பை என்ற ஆபரணத்தை அணிந்திருந்ததாலும் ‘குதம்பை சித்தர்’ என்ற சிறப்புப் பெயராலேயே அழைக்கப்பட்டார்.

இளமையில் வாசியோகம் என்ற கலையைப் பயின்று, ஆழ்ந்த நிலையில் இறைவனை தியானிக்க ஒரு காட்டிற்குள் புகுந்தார். அங்கிருந்த ஒரு மரப்பொந்தில் நுழைந்து தவ நிலையில் ஆழ்ந்தார். தம் அனுபவங்களை 32 பாடல்களாகப் பாடியுள்ளார். அந்தப் பாடல்கள் தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன. மயிலாடுதுறை மாயூரநாதர்கோயிலில் சிவன் சந்நதி சுற்றுப் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி அருகில் குதம்பை சித்தர் ஜீவ சமாதி உள்ளது. சமாதியின் மேல் விநாயகரின் திருவுருவம் உள்ளது. மழை வேண்டி இவருக்கு விசேஷ பூஜை செய்தால், மழை பொழியும் என்பது நம்பிக்கை. ஆரம்பகாலத்தில் இங்கிருந்த சந்தன மரத்தில் உருவான விநாயகர் இவர். அகத்தியரால் வழிபடப்பட்டவர் என்பதால் இவரை, ‘அகத்திய சந்தன விநாயகர்’ என்றும் அழைக்கிறார்கள்.

28.7.2023 – வெள்ளி
ஆடி வெள்ளி

“கோடி மாதங்கள் கிடைத்தாலும் ஆடி மாதம்” போல் ஒருமாதம் வழிபாட்டிற்கு கிடைக்காது. வாரக் கிழமைகளில் சுக்ர வாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும். திருமகள் அருளைப் பெற்றுத் தரும். ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும்.

கிராமங்களில் ஆடி வெள்ளியன்று வேப்ப இலையை கொண்டு வந்து வீட்டின் நிலை வாசலில் கட்டி வைப்பார்கள். அத்துடன் ஒரு சிறிய பித்தளை சொம்பு நிறைய தண்ணீரை ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், குங்குமம், இரண்டும் போட்டு, இந்த தீர்த்தத்தில் குலதெய்வமும் அம்மனும் வந்து அமர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்வார்கள். வெள்ளிக்கிழமை அன்று அம்பிகை வழிபாடு செய்தால் வெற்றிகள் வந்து குவியும். வேதனைகள் அகலும் என்பது முன்னோர் வாக்கு.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Thiruadipuram ,Adipuram ,Ambalu ,Lord Shiva ,Uttarayana ,
× RELATED திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ₹4.71 லட்சம்