×

ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்காக 4 ‘லிப்ட்’

 

சேலம், ஜூலை 15: சேலம் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய லிப்ட்கள் நேற்று செயல்பாட்டிற்கு வந்ததால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹96.53 கோடியில் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டாக மறுசீரமைக்கப்பட்டது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 11ம் தேதி திறந்து வைத்தார். தொடர்ந்த ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டின் இரு தளத்தில் இருந்தும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில், தரை தளத்தில் இருந்து ராசிபுரம், ஆட்டையாம்பட்டி, அம்மாப்பேட்டை, கன்னங்குறிச்சி, அயோத்தியாபட்டணம், வாழப்பாடி மார்கமாக செல்லும் பஸ்களும், முதல் தளத்தில் இருந்து ஜங்சன், ஓமலூர், தாரமங்கலம், இளம்பிள்ளை மார்கமாக செல்லும் பஸ்களும் இயக்கப்படுகின்றன. பயணிகள் வசதிக்காக, தரை தளத்தில் இருந்து, முதல் தளத்திற்கு செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் புதிதாக 4 லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால், பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டும், லிப்ட் வசதி செயல்படாமல் இருந்தது. இதனால், பயணிகள் கடும் சிரமமடைந்தனர். குறிப்பாக, வயதான முதியவர்கள் தரை தளத்தில் இருந்து முதல் தளம் செல்லவும், அங்கிருந்து தரை தளத்திற்கு வரவும் முடியாமல் அவதியடைந்தனர். மேலும் உடமைகளை எடுத்துச் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால், லிப்ட் வசதியை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தியும் வெளியானது. இதனையடுத்து அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்ததன் பேரில், நேற்று 4 லிப்ட்களும் செயல்பாட்டிற்கு வந்தது. இதற்காக தனி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு, லிப்ட் இயக்கப்படுகிறது. இதனால், பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்காக 4 ‘லிப்ட்’ appeared first on Dinakaran.

Tags : Erudku ,Salem ,Salem Erudku ,Eruduk ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...