×

உத்தரகாண்ட்டில் பரிதாபம் நிலச்சரிவில் கார்கள் புதைந்து மபியை சேர்ந்த 4 பக்தர்கள் பலி: மழை நின்றதால் மீட்பு பணிகள் தீவிரம்

உத்தர்காசி: உத்தரகாண்ட்டில் நிலச்சரிவில் 3 கார்கள் புதைந்து மத்தியபிரதேசத்தை சேர்ந்த 4 பக்தர்கள் பலியாகினர். டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களை கனமழை புரட்டிப் போட்டுள்ளது. இதில் இமாச்சல பிரதேச மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உத்தரகாண்ட்டிலும் நிலைமை மோசமடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உத்தரகாசியில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், கங்னானி பாலம் அருகே பக்தர்கள் சிலர் 3 கார்களில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்ட பாறைகள் உருண்டு விழுந்ததில் கார்கள் அப்பளம் போல் நொறுங்கின. இந்த விபத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 4 பக்தர்கள் பலியாகி உள்ளனர்.

7 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சங் தமி, கனமழை சமயத்தில் அத்தியாவசியமில்லாத பயணங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். சமோலி மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள ஜூம்மாகட் ஆற்றின் இடையே உள்ள பாலம் கடும் வெள்ளத்தில் நேற்று அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இந்தோ-திபெத் எல்லை சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்களுக்கான தொடர்பும் துண்டித்துள்ளது. தலைநகர் டேராடூனில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இமாச்சலில் மழை நின்றபோதிலும் கடுமையான வெள்ளம், நிலச்சரிவால் தொடர்ந்து நிலைமை சீரடையாமல் உள்ளது. 14,100 அடி உயரத்தில் உள்ள சந்தர்தால் சுற்றுலா பகுதியில் சிக்கித் தவிக்கும் 300 பயணிகளை மீட்க விமானப்படை ஹெலிகாப்டரை அனுப்புமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது. இமாச்சலில் சிம்லா-கல்கா மற்றும் மணாலி-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலை உட்பட 1,239 சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 1,416 வழித்தடத்தில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 2,577 டிரான்பார்மர்கள் சேதமடைந்துள்ளதால் குலு மற்றம் மண்டியில் பல இடங்களில் மின்சாரம் இன்றி மக்கள் தவிக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை முதல் மழை நின்றுள்ளதால் மீட்பு பணிகள் வேகமெடுத்துள்ளன.

The post உத்தரகாண்ட்டில் பரிதாபம் நிலச்சரிவில் கார்கள் புதைந்து மபியை சேர்ந்த 4 பக்தர்கள் பலி: மழை நின்றதால் மீட்பு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Mabi ,Uttarkandt ,Uttarkasi ,Madhya Pradesh ,northerlands ,Delhi ,Dinakaran ,
× RELATED மபியில் இரவு 10 மணி தாண்டியதால் சவுகான்...