×

விக்டோரியா வணிக வளாகம் ₹48.50 லட்சத்தில் சீரமைப்பு

சேலம், ஜூலை 2: சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான விக்டோரியா வணிக வளாகம், ₹48.50 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்படுகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். நகராட்சியாக இருந்த சேலம், மாநகராட்சியாக கடந்த 1994ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. தமிழகத்தில் 5வது மாநகராட்சியாக சேலம் கொண்டு வரப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, சேலம் டவுன் பஸ்கள், வெளியூர் பஸ்கள் அனைத்தும் தற்போதுள்ள பழைய பஸ் நிலையத்தில் இருந்தே இயக்கப்பட்டது. அப்போது ஆத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், ஓசூர், ஈரோடு, கோவை, திருச்சி உள்பட பல ஊர்களுக்கு இங்கிருந்து தான் வெளியூர் பஸ்கள் இயக்கப்பட்டது. மக்கள் தொகைக்கு ஏற்ப டவுன் பஸ்கள், வெளியூர் செல்லும் பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் பழைய பஸ் நிலையத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. வெளியூர் செல்லும் பஸ்களுக்கு தனியாக பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பல அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் அப்போதைய அரசை வலியுறுத்தினர். இதை பரிசீலித்த அரசு, சேலம் ஓமலூர் ரோட்டில் புது பஸ் நிலையத்தை ெகாண்டு வந்தது. இந்த பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தபின், வெளியூர் செல்லும் அனைத்து பஸ்களும் அங்கு கொண்டு செல்லப்பட்டது.

சேலம் பழைய பஸ் நிலையம், டவுன் பஸ் நிலையமாக மாற்றப்பட்டது. இங்குள்ள டவுன் பஸ் நிலையத்தில் இருந்து தினசரி 500க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையம் அருகே, ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட விக்டோரியா என்ற தியேட்டர் இருந்தது. அந்த தியேட்டர் சுமார் 40ஆண்டுகளுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் 25 ஆண்டுகளுக்கு முன், மாநகராட்சி நிர்வாகம் விக்டோரியா வணிக வளாகம் கட்டப்பட்டது. இந்த வணிக வளாகம் சேலம் மாநகரின் பிரதான அடையாளமாக திகழ்கிறது. இங்கு மொத்தம் 250 கடைகள் உள்ளன. இந்த வணிக வளாகத்தை மாநகராட்சி நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. இங்கு கடை வாடகை, அட்வான்ஸ் தொகை உள்ளிட்டவைகளை மாநகராட்சி நிர்வாகமே நிர்ணயித்து வருகிறது.

விக்ேடாரியா வணிக வளாகம் கட்டி 25 ஆண்டுகளாவதால், பல இடங்களில் கட்டிடம் பழுதடைந்துள்ளது. அவற்றை சீர் செய்ய வேண்டும் என்று பல தரப்பினர் அரசையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்தி வந்தனர். இது சம்பந்தமாக, சேலம் மாநகராட்சி திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. இது குறித்து கடந்த மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களிடம் அனுமதி கேட்கப்பட்டது. அந்த கூட்டத்தில் விக்டோரியா வணிக வளாகத்தை சீரமைக்கலாம் என்று அவர்கள் ஒப்புதல் அளித்தனர்.

இது குறித்து சேலம் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம், 32வது வார்டில் விக்டோரியா வணிக வளாகம் உள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த வணிக வளாகம், தற்போது பழுதடைந்துள்ளது. அதன் சுற்றுப்பகுதியிலும், வணிக வளாகத்தின் உட்பகுதியிலும் உள்ள மின் விளக்குகள், மின்சார ஒயர் கேபிள்கள் சேதமடைந்து உள்ளது. வணிக வளாகத்தின் படிகட்டுகளின் கைப்பிடிகள் முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே, விக்டோரியா வணிக வளாக கட்டிடத்தில் மராமத்து பணிகள் மேற்கொண்டு பராமரிக்கவும், வண்ணம் பூசி புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ₹48.50 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் நடக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post விக்டோரியா வணிக வளாகம் ₹48.50 லட்சத்தில் சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Victoria ,Mall ,Salem ,Victoria Mall ,Salem Corporation ,Dinakaran ,
× RELATED சென்னை திருமங்கலத்தில் உள்ள...