மதுரை: சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் வாக்குமூலத்தை பதிவு செய்த மாஜிஸ்திரேட் ஆஜராகி சாட்சியம் அளித்தார். சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரது கொலை வழக்கின் விசாரணை, மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே காவலர்கள் ரேவதி, பியூலா மற்றும் நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை குழுவிற்கு தலைமை வகித்த டாக்டர் செல்வமுருகன் உள்ளிட்ட பலர் ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தனர். விறுவிறுப்பாக நடந்த இந்த வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி என்.நாகலட்சுமி இடமாற்றம் செய்யப்பட்டார்.
கடைசியாக இந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்.18ல் நடந்தது. நீதிபதி இடமாற்றத்திற்கு பிறகு கடந்த 65 நாட்களாக விசாரணை நடக்காமல் இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் நடந்தது. நீதிபதி(பொ) தமிழரசி நேற்று வழக்கை விசாரித்தார். இதற்காக சிறையிலுள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது காவலர் ரேவதியின் வாக்குமூலத்தை பதிவு செய்த அப்போதைய தூத்துக்குடி மாஜிஸ்திரேட் சக்திவேல்(தற்போது சிதம்பரம்) ஆஜராகி தனது சாட்சியத்தை பதிவு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது, சம்பவம் நடந்தது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் ரேவதி, தானாக விரும்பியே தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். அவர் எந்தவித அழுத்தத்திற்கும் ஆட்படாமல் தானாகவே சாட்சியம் அளித்தார். அவரது வாக்குமூலம் மிகவும் தெளிவாக இருந்தது. அவரது வாக்குமூலத்தை நான் பதிவு செய்தேன் என சாட்சியம் அளித்தார். இதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் சக்திவேலிடம், கைதான போலீசார் தரப்பு வக்கீல்கள் சார்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை நீதிபதி ஜூலை 11க்கு தள்ளி வைத்தார். அன்றைய தினம் தடயங்களை சேகரித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் சாட்சியம் அளிக்கவுள்ளனர். நேற்றைய விசாரணை துவங்கிய நிலையில் சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கின் விசாரணை 65 நாட்களுக்கு பிறகு மீண்டும் விறுவிறுப்படைந்துள்ளது.
The post சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு மாஜிஸ்திரேட் ஆஜராகி சாட்சியம்: 65 நாட்களுக்கு பின் விசாரணை appeared first on Dinakaran.
