×

ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு வலைவிரிக்கும் குஜராத்தின் அமுல்: ஆசை காட்டி மோசம்…ரூ.6 கூடுதலாக கொள்முதல் செய்வதாக குற்றச்சாட்டு

* 3 மாநில எல்லையில் குளிரூட்டும் நிலையம் அமைத்து அத்துமீறல்
* கர்நாடகா, ஆந்திராவிலும் கடும் எதிர்ப்பு

தமிழ்நாட்டில் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக்கு முதுகெலும்பாக இருப்பது விவசாயம். விவசாயத்தில் முக்கிய பங்கு வகிப்பது கால்நடை வளர்ப்பு. இந்த கால்நடை வளர்ப்பு என்பது பால்உற்பத்தியை பிரதானமாக கொண்டே நடந்து வருகிறது. விவசாயம் சற்று தொய்வுற்று உழவர்கள் கலங்கி நிற்கும் நேரத்தில் அவர்களுக்கு கை கொடுப்பது கறவை மாடுகள் வளர்ப்பு. இதை கருத்தில் கொண்டும், வெண்மை புரட்சி என்ற இலக்கோடும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலனுக்காக 1981ம் ஆண்டு முதல் மூன்றடுக்கு பால்கூட்டுறவு அமைப்பு திறம்பட செயல்பட்டு வருகிறது. இதற்கு ஆவின் நிறுவனம் தலைமை கூட்டுறவு விற்பனை இணையமாக உள்ளது. தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் ஆவின் கூட்டுறவு இணையத்தின் கீழ் 9,673 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 35 லட்சம் லிட்டர் பால், 4.5லட்சம் உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் லாபகரமான மற்றும் சீரான விலை கூட்டுறவு சங்கங்களால் உறுதி செய்யப்படுகிறது.

இதுமட்டுமன்றி தமிழ்நாட்டில் பால்உற்பத்தியை அதிகரிப்பதற்கும், அதனை நிலைநிறுத்தவும் ஆவின் நிறுவனம் சார்பில் கால்நடைத்தீவனம், இடுபொருட்கள், தாதுஉப்புக்கலவை, கால்நடை சுகாதார பராமரிப்பு மற்றும் கால்நடைகளுக்கான இனப்பெருக்க சேவைகளும் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தரமான பால் மற்றும் பால்பொருட்களை நுகர்வோருக்கு குறைந்த விலையில் வழங்குவது உறுதி செய்யப்பட்டு வருகிறது. மொத்தத்தில் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். நுகர்வோரின் ஊட்டச்சத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற இலக்கோடு தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் குஜராத் மாநில அரசின் அமுல் பால் நிறுவனம், தமிழ்நாட்டில் தனது பால்குளிரூட்டும் நிலையத்தை அமைத்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநில எல்லைகளை மையமாக கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பால் கொள்முதல் செய்யும் பணியை அமுல் துவங்கியுள்ளது. இந்த மாவட்டத்தில் போச்சம்பள்ளி சிப்காட் அருகேயுள்ள ஓலப்பட்டி பகுதியில், கடந்த பிப்ரவரி மாதம் முதன் முதலாக பால் குளிரூட்டும் நிலையத்தை துவங்கியது. தற்போதைய நிலவரப்படி அங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 7 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதைத் தொடர்ந்து என்.தட்டக்கல் என்ற இடத்தில் பால் குளிரூட்டும் நிலையம் அமைத்து, விவசாயிகளிடம் சென்று கூடுதல் விலைக்கு பாலை கொள்முதல் செய்து, அதை குளிரூட்டி ஆந்திராவில் உள்ள அமுல் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து வருகிறது. அதன்படி, நாள் ஒன்றுக்கு சுமார் 2500 லிட்டர் முதல் 3 ஆயிரம் லிட்டர் வரை ஆந்திராவிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. தொடர்ந்து அமுல் நிறுவனம் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பால் கொள்முதல் செய்ய திட்டமிட்டிருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அமுல் நிறுவனம் கர்நாடகாவின் பால்உற்பத்தி கூட்டுறவு நிறுவனமான நந்தினிக்கு போட்டியாக ெபங்களூருவில் பால் மற்றும் தயிர் சந்தையில் மூக்கை நுழைத்தது. இதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தன. இதேபோல் ஆந்திர மாநிலத்தில் அமுல் நிறுவனத்தின் மையம் அமைப்பதற்கும் கடும் கண்டனங்கள் எழுந்தநிலையில், அதையும் மீறி இயங்கி வருகிறது. இந்தவகையில் தற்போது குஜராத் மாநில அரசு, தமிழகத்தில் அமுல் நிறுவனத்தின் கிளைபரப்ப அச்சாரமிட்டு அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. இதையடுத்து அமுல் நிறுவனத்தின் அத்துமீறலுக்கு கடும் கண்டனங்கள் வலுத்துள்ளது.

இது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், ‘‘அமுல் நிறுவனம் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையங்களை நிறுவியுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சுற்றியிருக்கும் பகுதிகளில் உள்ள பால்உற்பத்தியாளர்கள் மற்றும் சுயஉதவி குழுக்கள் மூலம் பால்கொள்முதல் செய்ய திட்டமிட்டிருப்பது குறித்து அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

மாநிலங்களுக்குள் ஒருவருக்கொருவர் பால் உற்பத்தி பகுதியை மீறாமல், தங்களது கூட்டுறவு சங்கங்கள் செழிப்பதற்கு பால் கொள்முதல் செய்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் அமுல் நிறுவனம் மேற்கொள்ளும் இத்தகைய எல்லை தாண்டிய கொள்முதல் ‘வெண்மைபுரட்சி’ என்ற கொள்கைக்கு எதிராக அமைகிறது. எனவே இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பகுதிகளில் அமுல்நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுத்து நிறுத்திட வேண்டும்,’’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் மறுப்பு தெரிவித்துள்ள அமுல் நிறுவனத்தின் தமிழ்நாடு ஒப்பந்ததாரர்கள், ‘‘ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு அமுல், பால்கொள்முதல் செய்வதாக கூறும் தகவல் பொய்யானது. ஆவின் நிறுவனம் விவசாயிகளுக்கு கொள்முதல் விலையாக என்ன தொகை நிர்ணயம் செய்திருக்கிறதோ, அதேவிலைக்கு மட்டுமே அமுல்நிறுவனம் பால் கொள்முதல் செய்யும். ஏற்கனவே ஆவின் நிறுவனத்திற்கு பால் விநியோகம் செய்வோர், மற்றொரு நிறுவனத்திற்கு பால் வழங்க வேண்டும் என்றால், அவர்களிடமிருந்து என்.ஓ.சி பெற வேண்டும். எனவே ஆவினுக்கு பால் வழங்குவோரை நாங்கள் கட்டாயப்படுத்தி வாங்க முடியாது,’’ என்று தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில் தரத்தை பொறுத்து ஆவின் லிட்டருக்குரூ.28முதல்ரூ.32வரை கொடுத்து கொள்முதல் செய்யும் பாலுக்கு அமுல் நிறுவனம்ரூ.34முதல்ரூ.38வரை கொடுத்து கொள்முதல் செய்வது வெட்டவெளிச்சமாகி உள்ளது. ஒரு மாநிலம் மக்கள் நலனை கருத்தில் கொண்டு சேவை மனப்பான்மையுடன் நடத்தி வரும் நிறுவனத்திற்கு போட்டியாக மற்றொரு மாநிலம் அங்கு வலைவிரிப்பது ஏற்புடையதல்ல. இது அந்த மாநிலத்தின் உரிமையை பறிக்கும் செயல் என்று சமூகமேம்பாட்டு அமைப்புகள் தொடர்ந்து குரல்எழுப்பி வருகின்றன. குறிப்பாக விலையை உயர்த்தி தருகிறோம் என்று மாய வலைவிரித்து, அதில் அப்பாவி விவசாயிகளை சிக்கவைப்பது எதிர்காலத்தில் பல்வேறு அபத்தங்களுக்கும் வழிவகுத்து விடும் என்கின்றனர் பால்உற்பத்தியில் அனுபவம் வாய்ந்த முன்னோடி விவசாயிகள்.

* உற்பத்தியாளருக்கும் சிக்கல்கள் உருவாகும்
தனியார் கொள்முதல் செய்வதைப்போல தனித்தனியாக அமுல் நிறுவனம் கொள்முதல் செய்தால் பிரச்னையில்லை. ஆனால் கூட்டுறவு அமைப்புகளை போல ஆரம்பித்து பால் கொள்முதல் செய்வதற்கு அமுல் முயல்கிறது. முதலில் இது, பால் உற்பத்தியாளர்களுக்கு லாபத்தை அளித்தாலும், ஆவினுக்கு நலிவை ஏற்படுத்தி விடும். அப்படி ஆவின் நலிவுற்றால் தனியார் நிர்ணயிப்பது தான் விலை என்ற நிலை உருவாகி விடும். இது எதிர்வரும் காலங்களில் பால் உற்பத்தியாளர்களுக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும். மேலும் தங்கள் இஷ்டத்துக்கு தனியார் நிறுவனங்கள், பால்விலையை உயர்த்தினால் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பாலுக்கான பட்ஜெட் மேலும் அதிகரித்து புதிய சுமையை ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது என்கின்றனர் பொருளாதார ஆய்வாளர்கள்.

* பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் 9,673 கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 4.5 லட்சம் நாள் ஒன்றுக்கு கொள்முதல் 35 லட்சம் லிட்டர்
* ஆவின் லிட்டருக்குரூ.28முதல்ரூ.32வரை கொடுத்து கொள்முதல் செய்யும் பாலுக்கு, அமுல் நிறுவனம்ரூ.34முதல்ரூ.38வரை கொடுத்து கொள்முதல் செய்வது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

* விழிப்புடன் இருக்கணும்
ஒரு சில நிறுவனங்கள் இக்கட்டான காலகட்டங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலுக்கு ஒரு
விலையும், திருவிழாக்காலங்களில் ஒரு விலையும் நிர்ணயித்து வழங்கி வருகிறது. ஆனால் எப்போதும் நிரந்தரமான விலையை தருவது அரசு நடத்தும் ஆவின் நிறுவனம். இதன் மூலம் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை பெறுவதோடு மட்டுமல்லாமல், அதன் மேம்பாட்டுக்கான பல்வேறு சலுகைகளையும் அரசு வழங்கி வருகிறது. இதனை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தவகையில் அமுல் போன்ற நிறுவனங்கள் கூடுதல்விலை என்ற பெயரில் முதலில் ஆசைகாட்டி வலைவிரிக்கும். அதன்பிறகு அது விதிக்கும் விதிமுறைகளில் நாம் சிக்கிக்கொண்டால் மீண்டு வருவது கடினம். இதை உணர்ந்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்களும், விவசாயிகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்கிறார் தமிழ்நாடு ஆவின்பால் முகவர்கள் மற்றும் விற்பனை பணியாளர் சங்கத்தலைவர் அருணாசுந்தர்.

* 76 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதலுக்கு பாதிப்பு
கிருஷ்ணகிரியை தலைமையிடமாக கொண்டு ஏற்கனவே பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) செயல்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் 220 பால் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 7,200 விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து பாலை வழங்கி வருகின்றனர். அதன்படி, நாள் ஒன்றுக்கு 76 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அமுல் கொள்முதலை தொடங்கியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘அமுல் நிறுவனத்தினர், கூடுதல் விலைக்கு எங்களிடம் பால் கொள்முதல் செய்கின்றனர். வாரம் ஒருமுறை அதற்கான பணத்தை எங்களுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் கால்நடைகளுக்கு தேவையான பூசா உள்ளிட்டவைகளையும் வழங்கி, அதற்கான தொகையினை பால் பண பட்டுவாடாவின் போது கழித்து வழங்குகின்றனர்,’’ என்றனர். இது கிருஷ்ணகிரி ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலுக்கு தடையாக அமைந்துவிடும் என்பது அங்குள்ள விவசாயிகளின் கருத்து.

* பல்லாண்டு திட்டம் இது
அமுல் (Anand milk producers union limited) என்பது 1946ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குஜராத் அரசின் பொதுத்துறை பால் நிறுவனம். இது ஆரம்பத்தில் இருந்தே தென்னிந்தியாவில் தனது பால் கொள்முதலை ஆரம்பிக்க பல்வேறு முயற்சிகளை செய்து வந்தது. ஆனாலும் கடந்த 2020ம் ஆண்டில் தென்னிந்தியாவில் தனது அதிகபட்ச விற்பனை இலக்கு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அப்போது அதன் அதிகாரிகள் கூறுகையில், ‘‘மேற்கிலிருந்து தொடங்கி பின்னர் வடக்கு, கிழக்கு நோக்கி சென்றோம். இப்போதும் நாங்கள் தெற்கில் நுழையவில்லை என்றால் தோல்வியடைந்து விடுவோம். அடுத்த 2ஆண்டுகளில்ரூ.200 முதல்ரூ.300 கோடி வரை முதலீடு செய்வோம்’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்தவகையில் அமுலின் பல்லாண்டு திட்டம் இது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

The post ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு வலைவிரிக்கும் குஜராத்தின் அமுல்: ஆசை காட்டி மோசம்…ரூ.6 கூடுதலாக கொள்முதல் செய்வதாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Aavin ,Karnataka ,Andhra ,Tamil Nadu ,Amul ,Dinakaran ,
× RELATED குஜராத்தில் கைதான இலங்கை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம்