×

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

சேலம், ஜூன் 15:சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கு 26 விடுதிகளும், பள்ளி மாணவிகளுக்கு 10 விடுதிகளும், கல்லூரி மாணவர்களுக்கு 2 விடுதியும், கல்லூரி மாணவிகளுக்கு 3 விடுதியும் என மொத்தம் 41 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் உணவும், உறைவிடமும் இலவசமாக வழங்கப்படும். 4ம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் மாணவ, மாணவிகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் (85 சதவீதம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் (10 சதவீதம்), பிற வகுப்பினர் (5 சதவீதம்) என்ற விகிதத்தில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்விகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அப்படி இல்லாத நிலையில், குறிப்பிட்ட விடுதியில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் காலியிடம் இருக்கும் பட்சத்தில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நடப்பு கல்வியாண்டிற்கு (2023-24) மாணவ, மாணவிகளின் சேர்க்கை, விடுதி மேலாண்மை அமைப்பு என்ற செயலியின் மூலம் இணைய வழியில் விதிமுறைகளை பின்பற்றி நடைபெறவுள்ளது. அதனால், இணைய வழியில் விண்ணப்பிக்க நேரடியாகவோ அல்லது காப்பாளர், காப்பாளினிகள் உதவியுடனோ விண்ணப்பிக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 30ம் தேதிக்குள் விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் ஒப்படைக்க வேண்டும். மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரி நிர்வாகத்திடம் விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி, கல்வி நிறுவன சான்றுடன் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

The post ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Adi Dravidar ,Hostels ,Salem ,Salem District ,Collector ,Karmegam ,Adi ,Dravidar ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...