×

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து விமர்சனத்தால் ஆத்திரம்: தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்கள் சூறை

*‘பந்த்’துக்கு அழைப்பு விடுத்த சந்திரபாபு நாயுடு உள்பட பிரமுகர்களுக்கு வீட்டுக்காவல் * விடிய விடிய 3 ஆயிரம் பேர் கைதுதிருமலை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி குறித்து தெலுங்கு தேசம் நிர்வாகி விமர்சித்ததால் அவரது வீடு உட்பட பல்வேறு நிர்வாகிகளின் வீடுகள் நள்ளிரவு சூறையாடப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து ‘பந்த்’துக்கு அழைப்பு விடுத்த சந்திரபாபுநாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் வீட்டுக்காவலில் வைத்தனர். மேலும், விடிய விடிய அக்கட்சியினர் 3 ஆயிரம் பேரை கைது செய்தனர். ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் தேசிய பிரதிநிதி பட்டாபி நேற்றுமுன்தினம் மாலை நிருபர்களை சந்தித்து கூறுகையில், ‘‘முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு, கஞ்சா விற்பனையை ஊக்கப்படுத்தி வருகிறது. இதனால், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். மாநிலத்தில் ஒரு வேலை வாய்ப்பையும், தொழிற்சாலையும் கொண்டுவராமல் விலைவாசி உயர்வையும் கண்டு கொள்ளாமல் அவர், பங்களாவில் ஏசி அறையில் அமர்ந்து கொண்டு ஜாதி அரசியலை தூண்டிவிட்டு வருகிறார்’’ என குற்றம் சாட்டினார். இவரது பேச்சு ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் இரவு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிலர், மங்களகிரியில் உள்ள பட்டாபியின் வீட்டிற்குள் நுழைந்து அங்கு நிறுத்தியிருந்த கார், பைக் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். மேலும், அவரது வீட்டில் இருந்த டி.வி, கம்ப்யூட்டர், நாற்காலி ஆகியவற்றையும் உடைத்துள்ளனர். இதேபோல், மாநிலம் முழுவதும் மூத்த நிர்வாகிகள் வீடு மற்றும் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகங்களிலும் பலர் திடீரென நுழைந்து சூறையாடினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினர் ஆங்காங்கே நேற்று முன்தினம் இரவு முதல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநில கவர்னர் விஸ்வபூஷன் அரிச்சந்திரா ஆகியோரை தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நேற்று முன்தினம் நள்ளிரவு தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘‘மாநிலம் முழுவதும் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. எதிர்க்கட்சி மூத்த நிர்வாகிகள் மற்றும் அலுவலகங்களின் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்திற்கும், அனைத்து நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கும் மத்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்’. மேலும், மாநில போலீசார் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை. ரிசர்வ் படையை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு அறிக்கை வெளியிட்டார். இதனிடையே, நேற்று முன்தினம் நள்ளிரவு பட்டாபி மற்றும் தாக்குதலுக்கு உள்ளான முக்கிய நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்களை சந்திரபாபு நாயுடு நேரில் பார்வையிட்டார். மேலும், விஜயவாடா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கட்சியினரை பார்த்து ஆறுதல் கூறினார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ரவுடியிச போக்கை எங்களிடம் காட்டுவதை முதல்வர் ஜெகன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அப்படி காட்டினாலும் இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் தெலுங்கு தேசம் கட்சியினர் அல்ல. எனவே, இதனை கண்டித்து  மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும்’’ என தெரிவித்தார். இதனால், நள்ளிரவு முதல் முன்னாள் அமைச்சர்கள், தெலுங்கு தேசம் கட்சி மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ேடார் வீடுகள் முன் திடீரென போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்களை வீட்டைவிட்டு வெளியே வராதவாறு வீட்டு சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், சந்திரபாபு வீட்டின் முன்னும் போலீசார் நேற்று அதிகாலை குவிக்கப்பட்டனர். அவரையும் அவரது மகன் லோகேஷ் மற்றும் குடும்பத்தார் யாரும் வெளியே வராதவாறு வீட்டுக்காவலில்  வைத்தனர். இதனிடையே நேற்று காலை பந்த் நடத்துவதற்காக தெலுங்கு தேசம் நிர்வாகிகள் ஆங்காங்கே திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மாநிலம் முழுவதும் விடியவிடிய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர், மதியம் அனைவரையும் விடுவித்தனர். எதிர்க்கட்சி தலைவர் நேற்று ‘பந்த்’அறிவித்து இருந்தாலும் மாநிலம் முழுவதும் ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் கடைகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் இயங்கியது. வாகன போக்குவரத்து வழக்கம் போல் இருந்தது. இருப்பினும் மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்ட்டிருந்தனர். திருப்பதியில் முன்னாள் எம்எல்ஏ சுகுணா அவரது வீட்டின் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றார். அவரை போலீசார் வீட்டுக்காவலில் வைத்தனர். மேலும், மாநகராட்சி அலுவலகம் அருகே மற்றும் திருப்பதி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முயன்றவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச்சென்றனர். இதனால், ஆந்திராவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பக்தர்களை தாக்கினால் நடவடிக்கைஆந்திர மாநில போலீசார் நேற்று அதிகாலை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநிலம் முழுவதும் சட்டம்- ஒழுங்கு சீர்குலையும் வகையில் யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு, தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினாலோ அல்லது பொதுமக்களை தாக்கினாலோ பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மீதோ அல்லது திருமலை- திருப்பதி பஸ்கள் மீதோ தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து விமர்சனத்தால் ஆத்திரம்: தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்கள் சூறை appeared first on Dinakaran.

Tags : AP ,Chief Minister ,Jehanmohan Reddy ,Chandrabababu Naidu ,Andhra ,House of Telugu Nation Party Administrators ,
× RELATED ஆந்திர மாநிலத்தில் தண்டவாளத்தில் லாரி சிக்கியதால் ரயில் சேவை பாதிப்பு