×

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மூலம் அதானிக்கு உதவியதால்தான் வேலையில்லா திண்டாட்டம்: பிரதமர் மோடி மீது ராகுல் தாக்கு

சிம்லா: ‘பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மூலம் தொழிலதிபர் அதானிக்கு உதவி செய்து நாட்டில் வேலைவாய்ப்பின்மையை அதிகரிக்கச் செய்து விட்டார் மோடி’ என ராகுல் காந்தி கூறி உள்ளார். இமாச்சல பிரதேசத்தின் சிர்மவுர் மாவட்டம், நஹன் பகுதியில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்த கனமழையால் 550க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். மிகப்பெரிய பொருட்சேதம் ஏற்பட்டது. இந்த வெள்ள பாதிப்புகளை சரி செய்ய மாநில காங்கிரஸ் அரசு சார்பில் ஒன்றிய அரசிடம் ரூ.9,000 கோடி நிவாரண நிதி கேட்கப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட மாநிலத்திற்கு உதவுவதற்கு பதிலாக, வெள்ள நிவாரண நிதியை தவறாக பயன்படுத்தியதாகவும் அதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் கூறி பிரதமர் மோடி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க வெளிப்படையாக முயற்சி செய்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் 22 தொழிலதிபர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்ய முடிந்த பிரதமர் மோடியால், வெள்ள நிவாரணமான ரூ.9,000 கோடியை தர முடியவில்லை. இங்குள்ள அனைத்து குளிர்பதனக் கிடங்குகளையும் அதானியிடம் ஒப்படைத்து அவரே ஆப்பிள் விலையை தீர்மானிக்கும் நிலைக்கு மோடி கொண்டு வந்துள்ளார். மோடி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அதானிக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்கின்றன. பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி மூலம் அதானி போன்றவர்களுக்கு உதவியதோடு, சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை ஒழித்து வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரித்து விட்டார் மோடி. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

 

The post பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மூலம் அதானிக்கு உதவியதால்தான் வேலையில்லா திண்டாட்டம்: பிரதமர் மோடி மீது ராகுல் தாக்கு appeared first on Dinakaran.

Tags :
× RELATED டெல்லி விமான நிலையத்தில் மின்...