×

குஜராத்தில் விளையாட்டு மைய தீ விபத்து உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ மாதிரிகள் சேகரிப்பு

ராஜ்கோட்: ராஜ்கோட் விளையாட்டு மைய தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ‘டிஆர்பி கேம் ஸோன்’ என்ற பெயரில் விளையாட்டு மையம் செயல்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மாலையில் இதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கோடை விடுமுறை நாள் என்பதால், 300க்கும் மேற்பட்டோர் அங்கிருந்துள்ளனர். சிறுவர்கள் உள்ளிட்டோர் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு தற்காலிக கட்டிடம் சரிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். தீ விபத்து ஏற்பட்டதும் அங்கிருந்து தப்பி செல்ல பலர் முயற்சித்தனர். தீ கொழுந்து விட்டு எரிந்து அந்த பகுதியே புகை மண்டலமாக இருந்ததால் யாராலும் நகர முடியவில்லை. தீயணைப்பு படையினர் விரைந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் மின் கோளாறால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கூறினர்.

இதில் 4 சிறுவர்கள் உட்பட 27 பேர் பலியாகியுள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர் என மாநகர போலீஸ் கூடுதல் ஆணையர் வினாயக் படேல் தெரிவித்தார். குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். தீ விபத்து குறித்து விசாரணை நடத்த கூடுதல் டிஜிபி சுபாஷ் திரிவேதி தலைமையில் எஸ்ஐடி குழுவை அரசு அமைத்துள்ளது. 72 மணி நேரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி எஸ்ஐடிக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. உடல்கள் தீயில் கருகி இருப்பதால் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மரபணு சோதனை மூலம் உடல்களை அடையாளம் காண மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

The post குஜராத்தில் விளையாட்டு மைய தீ விபத்து உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ மாதிரிகள் சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags :
× RELATED டெல்லி விமான நிலையத்தில் மின்...