×

ஜாமீன் நிபந்தனை கடைபிடிக்கப்படுவதை கண்காணிக்க ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தனி பதிவேடு பராமரிக்க வேண்டும்: காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சுற்றறிக்கை

சென்னை: ஜாமீன் நிபந்தனைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பதிவேடுகளை பராமரிக்கவும் அவற்றை கையாள ஒரு காவலரை நியமிக்க வேண்டும் என்றும் கமிஷனர்கள், உயர் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கடிதம் எழுதியுள்ளார். குற்ற வழக்கு ஒன்றில் ஜாமீன் பெற்றவர், அதன் நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்று உயர் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. மேலும், இதுபோன்று நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகள் முறையாக நிறைவேற்றப்படுகிறதா என்பது குறித்து கண்காணிப்பதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இரண்டாம் நிலை காவலர் அந்தஸ்துக்கு குறையாத ஒருவரை நியமிக்கும்படி காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபிக்கு நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.

இதன் அடிப்படையில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஏப்ரல் 3ம் தேதி தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசு தலைமை வழக்கறிஞரின் கடிதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், ‘‘ஒவ்வொரு குற்றம்சாட்டப்பட்ட நபருக்கும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை கொண்ட ஒரு பதிவேட்டை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பராமரிக்க வேண்டும். அவற்றை கையாளுவதற்காக இரண்டாம் நிலை அல்லது முதல் நிலை காவலர் அல்லது தலைமை காவலர் அந்தஸ்திலான ஒருவரை ஒவ்வொரு காவல் நிலையத்தில் நியமிக்க வேண்டும். நிபந்தனைகளை நிறைவேற்றாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்புடைய அரசு குற்றவியல் வழக்கறிஞரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஜாமீனை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ஜாமீன் நிபந்தனை கடைபிடிக்கப்படுவதை கண்காணிக்க ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தனி பதிவேடு பராமரிக்க வேண்டும்: காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சுற்றறிக்கை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...