வேலூர் : தொழில் செய்வதாக கூறி தொழில் செய்ய கூடாது, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் தொழில் செய்ய வேண்டும் என்று தொழில் முன்னோடிகள் திட்ட முகாமில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசினார்.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வேலூர் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான தனி சிறப்பு திட்டமான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன், முன்னோடி வங்கி மேலாளர் ஜமால் மொய்தீன், தாட்கோ மேலாளர் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார்.
முன்னதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் முகாமினை தொடங்கி வைத்து பேசியதாவது:அரசியல் சாசன சட்டத்தை இயற்றியவர் அம்பேத்கர். அந்த பெயரில் தான் இந்த திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது. சட்டத்தில் இந்திய குடிமகனாக இருக்கும் ஒரு குடிமகன் நாட்டின் எந்த பகுதியிலும், எந்த தொழிலை யார் வேண்டுமானாலும் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தொடங்க உரிமை உண்டு. அது அவர்களின் அடிப்படை உரிமை என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை செயல்படுத்தும் வகையில் நீங்கள் இந்த தொழில் செய்வதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு. தொழில் தொடங்க முதலீட்டிற்கு எங்கு செல்வது என்பது எல்லாம் நமக்கு கேள்வி வரும். அதற்காக தான் தமிழக அரசு அந்த தொழில் முனைவோருக்கு எப்படி எல்லாம் பணம் கொடுக்கவும், பொருளாதார உதவிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து தீர ஆராய்ந்து திட்டம் வகுத்துள்ளது.
பொருளாதாரத்தில் குறைவாக இருந்தாலும், அவர்களையும் தொழில் முனைவோர்களாக மாற்ற வேண்டும். அதற்காக செயல்முன் வடிவம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்தி, நல்ல தொழில் முனைவோராக நீங்கள் வர வேண்டும். வங்கியில் பல்வேறு மானியத்துடன் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தொழில் தொடங்க பொருளாதார உதவியை வங்கிகள் வழங்கி வருகிறது.
வங்கியில் கடன் வாங்கினால் அந்த கடனை கட்டாயம் திருப்பி செலுத்தவேண்டும். உரிய முறையில் செலுத்தாவிட்டால் அவர்களது அடுத்த தலைமுறையினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். சிபில் கடன்முறையாளர்கள் கண்காணித்து கொண்டிருப்பார்கள். எனவே தொழிலை நீங்கள் நல்ல விதமாக செய்வதற்கு அதற்கான நிதி உதவியை பெற வேண்டும். பெற்ற நிதியுதவியை அந்த தொழிலுக்கு மட்டும் தான் செலவிட வேண்டும். நிலையான தொழிலை செய்திட வேண்டும்.
நம்முடைய பொருளாதாரம், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் ஒரு தொழிலை செய்ய வேண்டும். அதுவும் உற்பத்தி சார்ந்த தொழில் செய்ய வேண்டும். பெரிய அளவில் தொழில் செய்வதாக கூறி தொழில் செய்ய கூடாது. விவசாயம், கால்நடை, மீன் உள்ளிட்ட எண்ணற்ற தொழில்கள் உள்ளன. அவ்வாறு தொழில் செய்தால் கட்டாயம் உள்நாட்டின் உற்பத்தி உயரும். உள்நாட்டு உற்பத்தி உயர்ந்தால் பணவீக்கம், விலை ஏற்றம் ஆகியவற்றை எளிதாக வென்றுவிடலாம். இவ்வாறு அவர் பேசினார்.
The post தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வு முகாம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் தொழில்கள் செய்ய வேண்டும் appeared first on Dinakaran.
